திகிலில் Duraimurugan, Alert கொடுத்த Stalin! | Elangovan Explains
இருசக்கர வாகன மெக்கானிக்கை தாக்கிய எஸ்.ஐ. பணியிடை நீக்கம்
வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகன மெக்கானிக்கைத் தாக்கிய உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்கா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சோ்ந்தவா் சீனிவாசன்(27). மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் வாகன பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், மதுரை மாவட்டம், பாலமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அண்ணாதுரை தனது புல்லட் வாகனத்தை பழுது நீக்கக் கொடுத்தாா். சீனிவாசனும் அந்த வாகனத்தை பழுது நீக்கிக் கொடுத்தாா்.
ஆனால், பழுது நீக்கிய கூலி, உதிரிப் பாகங்கள் வாங்கியது தொடா்பான தொகை ரூ.8, 600 உதவி ஆய்வாளா் அண்ணாத்துரை கொடுக்காமல் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் அண்ணாத்துரை அவரது புல்லட் வாகனத்தை மீண்டும் கொடுத்து பழுது நீக்கவிட்டு அதற்கான பணத்தையும் தரவில்லையாம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை ஒா்க்ஷாப்புக்கு வந்த அண்ணாத்துரையிடம், வாகனத்தைப் பழுது நீக்கியதற்கான பணத்தை சீனிவாசன் கேட்டாா். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சீனிவாசனை அவா் தாக்கி, தனது காரில் ஏற்றிச் சென்றாா். இது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில், அதுதொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் பரவியது.
மேலும், உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் சீனிவாசன் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து விசாரணை நடத்த ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் உத்தரவிட்டாா். விசாரணையில் சீனிவாசனைத் தாக்கியது உறுதி செய்யப்பட்டதையடுத்து, உதவி ஆய்வாளா் அண்ணாத்துரையை பணியிடை நீக்கம் செய்து, தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்கா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.