குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இளம் பெண்ணை மீட்கும் பணி தீவிரம்!
Game Changer: "ஷங்கர் தமிழ் இயக்குநர் அல்ல, தெலுங்கு இயக்குநர்; ஏன்னா..." - ராஜமெளலி
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, கியாரா அத்வானி அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேம் ஜேஞ்சர்'.
அரசியல் திரில்லர் திரைப்படமான இது வரும் ஜனவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்திற்கான புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாகியிருக்கிறது. நேற்று (ஜன.2) இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. ஹைதாராபாத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இயக்குநர், சங்கர், ராம் சரண், தில்ராஜூ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். ராஜமெளலி இதன் ட்ரெய்லரை வெளியிட்டார்.
இந்த ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர் குறித்துப் பேசியிருக்கும் ராஜமெளலி, "எல்லாரும் ஷங்கர் தெலுங்குத் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார், இதுதான் அவரது நேரடி தெலுங்கு திரைப்படம் என்று சொல்கிறார்கள். ஆனால், எங்களைப் பொறுத்தவரை இயக்குநர் ஷங்கர் தமிழ் இயக்குநர் அல்ல, தெலுங்கு இயக்குநர். ரொம்ப நாள்களாக நாங்கள் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ் இயக்குநராக அவரை நாங்கள் வேறுபடுத்திப் பார்த்ததில்லை. அவர் மீது எங்களுக்கு எப்போதும் பெரிய மரியாதை இருக்கிறது. பிரமாண்ட திரைப்படங்களுக்கு என்னை இன்ஸ்பிரேஷனாகக் கூறுகிறார்கள். ஆனால் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் ஷங்கர் சார்தான். இன்று உலகளவில் பெரிய வசூல், பிரமாண்டம் என்றெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். பிரமாண்டத்தின் ஒரிஜினல் கேங்ஸ்டர் (OG) ஷங்கர்தான்.
அவர் பிரமாண்ட திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருந்தபோது நாங்கள் எல்லாம் கத்துக் குட்டிகளாக உதவி இயக்குநராக சினிமா துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தோம். உலகை வியக்க வைக்கும் பிரமாண்ட திரைப்படத்தை நம்மால் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை நமக்குக் கொடுத்தவர் ஷங்கர்தான்.
அப்படிப்பட்டவரின் இயக்கத்தில் என்னுடைய மகதீரன் ராம் சரண் நடிக்கிறார் என்பது எனக்குப் பெருமை. 'மகதீரா', 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடித்ததை விடவும் வேறுபட்ட பரிணாமத்தில் 'கேம் ஜேஞ்சர்' படத்தில் அசத்தியிருக்கிறார் ராம் சரண். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற வாழ்த்துகள். இந்தியாவில் மற்றுமொரு மைல் கல்லாக இப்படம் இருக்கும்" என்று பேசியிருக்கிறார்.