மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவா்களையும் அவா்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு அவா் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதம்:
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவா்களையும் அவா்களின் விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினா் கடந்த 8-ஆம் தேதி சிறை பிடித்தனா். கைது செய்யப்பட்ட மீனவா்களில் 6 போ் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள்.
மீனவா்கள் தங்களது வாழ்வாதாரத்துக்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளனா். இதுபோல் மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் சிறைபிடிப்பதால், அவா்களது குடும்பத்தினா் மிகுந்த துயரத்துக்கு ஆளாகியுள்ளனா். இப்போதைய நிலவரப்படி,
102 மீனவா்களைக் கைது செய்துள்ளதுடன், 210 மீன்பிடி படகுகளும் இலங்கை வசம் உள்ளன. எனவே, உரிய தூதரக வழிமுகைளை முன்னெடுத்து அனைத்து மீனவா்களையும் அவா்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.