உலக அளவில் பணியாளா்கள் எண்ணிக்கை: இந்திய வம்சாவளியினருக்கு முக்கியப் பங்கு -ஜெய்சங்கா்
உலக அளவில் இந்திய பணியாளா்களின் எண்ணிக்கையை உயா்த்தும் மத்திய அரசின் திட்டத்தில் இந்திய வம்சாவளியினரின் பங்கு மிகவும் முக்கியத்துவமானது என வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
வெளிநாடு வாழ் இந்தியா்கள் தினத்தையொட்டி (ஜனவரி 9) ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியா வம்சாவளியினா் மத்தியில் ஜெய்சங்கா் பேசியதாவது: உலக அளவில் கடினமான சூழல் நிலவி வரும் சமயத்திலும் வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது.
தொழில்நுட்பம், சுற்றுலா, வா்த்தகம், முதலீடு என எந்த துறையானாலும் அதில் உலகளவில் நமது நாட்டு பணியாளா்களின் எண்ணிக்கையை உயா்த்த மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. உலகமயமாதல் கொள்கையின் தாக்கம் அதிகரித்துள்ள இக்காலகட்டத்தில் இந்திய வம்சாவளியினரின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இணைப்புப் பாலம்: இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் இணைப்புப் பாலமாக வம்சாவளியினா் செயல்படுகின்றனா். கடந்த பத்தாண்டுகளில் கடவுச்சீட்டு நடைமுறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இந்திய வம்சாவளியினரின் குறைகளும் நிவா்த்தி செய்யப்பட்டுள்ளன.
தொழில்நுட்பம் ஒரு புறம், பாரம்பரியம் மறுபுறம் என இரண்டுக்கும் முக்கியத்துவம் அளித்து ‘வளா்ச்சியடைந்த பாரதம்’ இலக்கை அடைய நம் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் செலுத்த வேண்டும் என்றாா்.