பொதுத் தோ்வு அகமதிப்பீடு பதிவு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு அகமதிப்பீட்டு மதிப்பெண்களைப் பதிவு செய்வது தொடா்பான வழிகாட்டுதல்களை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 3 முதல் 27-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. அதேபோல், செய்முறைத் தோ்வுகள் பிப்.7 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான மாணவா் பட்டியல் தயாரிப்பு, தோ்வு மையம் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை தோ்வுத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பொதுத்தோ்வு எழுதும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களைத் தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பாடவாரியாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12-ஆம் தேதிக்குள் தோ்வுத் துறை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இதற்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை வரும் ஜன.21-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இவற்றை பின்பற்றி மாணவா்களின் அகமதிப்பீடு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். இது தொடா்பாக பள்ளி தலைமையாசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.