ராமநாதபுரம்: சமையல் சூப்பர் ஸ்டார் சீஸன்-2 கோலாகலம்; இறுதிப்போட்டிக்குத் தேர்வான நளபாக வித்தகர்கள்!
மாநிலத்தின் நீண்ட கடல் பரப்பைக் கொண்டதும், எண்ணிலடங்கா கடல் வாழ் உயிரினங்கள் வாழும் பகுதியாகத் திகழும் மன்னார் வளைகுடா பகுதியினைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் ராமநாதபுரத்தில் இன்று நடந்த சமையல் சூப்பர் ஸ்டார் சீஸன் -2 போட்டியில் மகளிருடன் ஆடவர்களும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஒருபுறம் சமையல் போட்டி மறுபுறம் தாங்கள் சமைத்த சமையல் குறித்த அனுபவங்கள் என நிகழ்ச்சி அரங்கத்தை அதிரச் செய்தனர்.
முதல் கட்டத் தேர்வுக்காகச் சர்க்கரைவள்ளி சுவியம், தேங்காய் திரட்டி பால், பனங்கிழங்கு லட்டு, கல்யாண முருங்கை ரொட்டி, மாசி கருவாடு-புடலங்காய் கூட்டு, கத்திரிக்காய் இறால் தொக்கு, கருவாடு மசியல், கருவாட்டுச் சாதம், கருப்பு கவுனி அரிசிச் சாதம், உளுந்தங்களி, கடலைப் பருப்பு உக்காரம், கவுனி அரிசி கருப்பட்டி அல்வா, இறா ஊண் சோறு, தினை வெஜ் பிரியாணி, இடியாப்ப சிக்கன் பிரியாணி, மீன் துலுக்கு, இறால் களியல், பருத்தி பால் கஞ்சி எனக் கமகம விருந்தினைச் சமைத்திருந்தனர். அந்த உணவுகள் குறித்துக் கேட்டறிந்து, சுவை பார்த்து அடுத்த கட்ட நேரடி சமையல் போட்டிக்கான 10 போட்டியாளர்களை செஃப் தீனா தேர்வு செய்தார்.
சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் 3 போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் விதமாக நடந்த போட்டியில் மைதிலியின் ஜப்பான் சிக்கன், எக் பன்னீர், ஷாலினியின் பனங்கிழங்கு லட்டு, கல்யாண முருங்கை ரொட்டி, நூருல் சாகுல்ஹமீதின் பிரைடு பன்னீர், ஹனி சிக்கன், செல்வக்குமாரின் பன்னீர் ரைஸ், சிக்கன் கிரேவி, பிரியதர்ஷினியின் கீழக்கரை மாப்பிள்ளை பாயாசம், பன்னீர் டிக்கர், சரண்யாவின் சுவிட் பொட்டட்டோ, எக் மசாலா, மஜிதாபேகத்தின் கோபி பரோட்டா, பன்னீர் கிரிமி கறி, ஷர்மிளா பேகத்தின் சிக்கன் பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா, ஷரீபாவின் வட்டலப்பம், திரட்டுப் பால், நூருல் நஜீபாவின் பன்னீர் கிரேவி, லேபர் சப்பாத்தி என எல்லா வகை ரெசிபியினையும் சுவைத்துப் பார்த்ததுடன், அவர்கள் அந்த உணவு வகைகளை அழகாக வெளிக்காட்டிய விதம் போன்றவற்றின் மூலம் சரண்யா, மஜிதா பேகம், ஹரீபா ஆகிய மூவரை இறுதிப்போட்டிக்கான போட்டியாளர்களாகத் தேர்வு செய்தார்.
மேலும் சிறப்பான உணவு வகைகளைத் தயார் செய்த ராமநாதபுரம் வாசகி மகேஸ்வரி, தூத்துக்குடி வாசகி வனஜா ஆகியோரும் சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்க நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக இரண்டாம் கட்டப் போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் இறுதிப்போட்டிக்குத் தேர்வாகிய போட்டியாளர்களுக்குச் சான்றிதழும் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.