குவைத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு
சங்குப் பூ துவையல், பனை ஓலை கொழுக்கட்டை...விழுப்புரத்தில் களைகட்டிய சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி!
முதல் போட்டி மதுரையிலும், இரண்டாவது போட்டி தஞ்சாவூரிலும், மூன்றாவது போட்டி திருச்சியிலும், நான்காவது போட்டி ராமநாதபுரத்திலும், ஐந்தாவது போட்டி காரைக்குடியிலும் நடைபெற்ற நிலையில் ஆறாவது போட்டி விழுப்புரம் ஆறுமுகம் மீனாட்சி திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் விழுப்புரம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குறிப்பாக விழுப்புரத்தைச் சுற்றியுள்ள அரசூர், இளவனாசூர் கோட்டை, திருக்கோவிலூர், வளவனூர், கோலியனூர், விக்கிரவாண்டி, கூட்டேரிப்பட்டு, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
முதல் சுற்று தேர்வுக்காக கேரட் டிலைட், ஃபிஷ் 65, பேபி பொட்டேட்டோ கிரேவி, கொள்ளு துவையல், பலா பிஞ்சு பிரியாணி, தேங்காய்பால் சாதம், நெத்திலி கருவாடு தொக்கு, வெற்றிலை பாயாசம், தூதுவளை சூப்பு, முடக்கத்தான் தோசை, பிரண்டைத் துவையல், கற்பூரவள்ளி சூப், ஃபிஷ் ரோல், கேரட் பீட்ரூட் ஜெல்லி, பூசணிக்காய் வடிவ கேரட் ஸ்வீட், பிரட் சாசேஜ் கபாப், கத்தரிக்காய் முட்டை வடை, கடாய் கொத்துக்கறி, வாழைத்தண்டு பச்சடி, ரஸ்க் அல்வா, சோளம் கொழுக்கட்டை, சோளம் வடை, கத்தரிக்காய் பிரியாணி, சம்பா ரவை அல்வா, தவளை அடை, புளி இஞ்சி தொக்கு, சாக்லேட் லாவா கேக், மில்க் கேக், நவதானிய கோலா உருண்டை, சென்னாகுன்னி கருவாட்டு கத்திரிக்காய் தொக்கு, கோதுமை ரவா கேசரி, தினை கேசரி, நெய் சாதம், பெருஞ்சீரக சாதம் போன்றவற்றை செய்து அசத்தியிருந்தனர்.
அதேபோல பூண்டு ஊறுகாய், கோதுமை உப்புமா, வெற்றிலை லட்டு, கருணைக்கிழங்கு பிரியாணி, கத்திரிக்காய் புளி தொக்கு, ராகி களி, முருங்கைக்கீரை பொரியல், கொள்ளு துவையல், நெத்திலி கருவாட்டுக் குழம்பு, சேனை இலைக் கறி, வெந்தய லட்டு, பிரண்டை வடை, சங்குப்பூ துவையல், பனை ஓலை கொழுக்கட்டை, பனை கிழங்கு பொடிமாஸ், நார்த்தங்காய் இனிப்பு பச்சடி என வித விதமாக இருந்த அனைத்து உணவுகளையும் சுவைத்த செஃப் தீனா, அதன் செய்முறை குறித்து போட்டியாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதற்கிடையில் காத்திருந்த போட்டியாளர்கள் மற்றும் அவரது குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு மேடையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
செஃப் தீனாவுடனான கலந்துரையாடலின் போது பேசிய புதுச்சேரியைச் சேர்ந்த தீபலட்சுமி, ``வீட்டில் அனைவருக்குமான உணவை பார்த்து பார்த்து கவனமாக செய்கிறோம். ஆனால் அதற்கான எந்தவித சிறு அங்கீகாரமும் வீட்டில் கிடைப்பதில்லை. ஆனால் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் அதற்கான அங்கீகாரம் கிடைக்கிறது. அதில் எனக்கு மகிழ்ச்சி” என்றார்.
அதேபோல ``ஆடல், பாடலுக்காக பல மேடைகள் இருக்கின்றன. ஆனால் சமையலுக்கான மேடைகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்றாலும் பெறாவிட்டாலும், என்னைப் போல மற்ற சகோதரிகள் விதவிதமாக சமைத்து எடுத்து வந்த உணவுகளை பார்த்ததில் மகிழ்ச்சியாக இருந்தது” என்றார் திருக்கோவிலூரைச் சேர்ந்த ஷபானா பானு.