சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் விலகல்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சைம் ஆயூப் விலகியுள்ளார்.
பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அண்மையில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஃபீல்டிங்கின்போது, பந்தை தடுக்க முயன்ற சைம் ஆயூபுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அவர் குறைந்தது 6 வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து, அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இதையும் படிக்க: ஐசிசியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்ற இலங்கை வீரர்!
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து சைம் ஆயூப் விலகியுள்ளது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி கூறியதாவது: பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் சைம் ஆயூபுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுடன் தினமும் பேசி வருகிறேன். சைம் ஆயூபின் கணுக்காலில் போடப்பட்டுள்ள கட்டு இன்னும் சில நாள்களில் அகற்றப்பட்டும். ஆனால், அவர் காயத்திலிருந்து குணமடைய நிறைய நாள்கள் தேவைப்படும்.
அவரது கிரிக்கெட் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலிருந்து அவர் விலகுகிறார். அவர் பாகிஸ்தானின் சொத்து. அவர் முழு உடல் தகுதியுடன் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க விரும்புகிறோம். அவர் குணமடைந்து வருவதை தனிப்பட்ட முறையில் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என்றார்.
இதையும் படிக்க: ஜோஃப்ரா ஆர்ச்சரை குறிவைத்தது ஏன்? திலக் வர்மா பதில்!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.