மகளிர் டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு இந்திய மகளிரணி முன்னேறியுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வங்கதேசம் முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: ஜோஃப்ரா ஆர்ச்சரை குறிவைத்தது ஏன்? திலக் வர்மா பதில்!
வைஷ்ணவி சர்மா அபாரம்
முதலில் விளையாடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் கேப்டன் சுமையா அக்தர் அதிகபட்சமாக 21 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, ஜன்னாட்டுல் 14 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வைஷ்ணவி சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஷப்னம் ஷகில், ஜோஷிதா, கொங்கடி த்ரிஷா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
அரையிறுதிக்கு முன்னேற்றம்
65 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 7.1 ஓவர்களின் முடிவில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் தொடக்க வீராங்கனை கொங்கடி த்ரிஷா அதிகபட்சமாக 31 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, சானிகா சால்கே 11 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிக்க: 2024-ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதை வென்ற நியூசி. ஆல்ரவுண்டர்!
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வைஷ்ணவி சர்மா ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.