Doctor Vikatan: புளிப்பு நெல்லிக்காய், துவர்ப்பு நெல்லிக்காய்... இரண்டில் எது பெ...
புதினை `லெஃப்ட் ஹேண்டில்’ டீல் செய்யும் ட்ரம்ப்... ரஷ்யா பணிந்து முடிவுக்கு வருமா உக்ரைன் போர்?!
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர புதின் தவறினால், ரஷ்யா மீது அதிக வரிகளையும், மேலும் பொருளாதாரத் தடைகளையும் விதிக்கப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கைதான் உலக நாடுகள் மத்தியில் தற்போதைய பேசுபொருள்.
பதவியேற்ற முதல் நாளே சட்டவிரோத குடியேற்றம், பாலினம், வரி விதிப்பு, எல்லைப் பிரச்னை, பனாமா கால்வாய் என பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு கவனம் ஈர்த்த ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் ரஷ்யாவுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அந்த பதிவிலேயே ‘இந்த விவகாரத்தை நாம் இலகுவான வழி அல்லது கடினமான வழி எப்படி வேண்டுமானாலும் தீர்த்துக் கொள்ளலாம்’ என்று புதினை கிட்டத்தட்ட லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்திருக்கிறார்.
கடும் நிதி நெருக்கடி, பொருளாதார சவால்களை ரஷ்யா எதிர்நோக்கியிருக்கும் இந்தச் சூழலை சரியாக பயன்படுத்திக் கொண்டு இத்தகைய ‘மிரட்டலை’ ட்ரம்ப் விடுத்திருக்கிறார் என்கின்றனர் உலக அரசியல் நிபுணர்கள்.
ஒருவேளை ரஷ்யாவின் மீது கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே ரஷ்யாவின் நிதி காலியாகும் என்று கணிக்கப்படுகிறது. எனினும், ரஷ்ய பொருளாதாரம் எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை புதின் தொடர்ந்து மறைத்தே வருகிறார்.
இந்தச் சூழலில் ட்ரம்ப்பின் இந்த பொருளாதார தடை அச்சுறுத்தலுக்கு பதிலளித்துள்ள ரஷ்யா, "பரஸ்பர மரியாதைக்குரிய உரையாடலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.
2014-ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பலமுறை புதின் தெரிவித்திருந்தாலும், தற்போது உக்ரைனின் நிலப்பரப்பில் சுமார் 20% இருக்கும் ரஷ்யாவுக்கான ஆதாயங்களின் யதார்த்தத்தை உக்ரைன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். மேலும், நேட்டோ கூட்டணியில் உக்ரைன் இணைவதையும் அவர் ஏற்க மறுக்கிறார்.
இன்னொருபுறம் உக்ரைன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. எந்தவகையில் அது தன்னுடைய நிலப்பரப்பை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.
கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ட்ரம்ப், “விரைவில் புதினுடன் தான் பேச இருக்கிறேன். அவர் பேச்சுவார்த்தைக்கு ஒத்துவரவில்லை என்றால், அதிக பொருளாதார தடைகளை ரஷ்யா எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று எச்சரித்திருந்தார்.
இதற்கு மறுநாள் தனது சமூக வலைதளத்தில், பொருளாதாரம் அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கும் ரஷ்யாவுக்கும், அதிபர் புதினுக்கும் தான் ஒரு மிகப் பெரிய உதவி செய்யப் போவதாக ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.
ரஷ்யா மீது கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்ற ட்ரம்ப்பின் இந்த அச்சுறுத்தல் ‘நிலைமை இன்னும் மோசமாகப் போகிறது என்ற சமிக்ஞையை விளாடிமிர் புதினுக்கு அனுப்புகிறது’ என்று ட்ரம்ப்பின் முன்னாள் உக்ரைன் சிறப்பு பிரதிநிதி கர்ட் வோல்கர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த கடுமையான வார்த்தைகளை உக்ரைன் ஆதரிக்கக் கூடும். ஆனால், இப்போதைக்கும் உக்ரைன் மக்களுக்கு தேவை வெறும் வார்த்தைகள் அல்ல. செயல்கள் மட்டுமே என்பதை அதன் ஆட்சியாளர்கள் உணர்ந்திருக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் வெளிப்படையாக எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை.
பொருளாதார தடை என்பது ரஷ்யாவுக்கு கொடுக்கப்படும் மிகவும் பலவீனமான பதிலடி என்பதே சமூக வலைதளங்களில் உக்ரைன் மக்களில் பலரும் முன்வைக்கும் கருத்து ஆகும். ஆனால், பெரும்பாலானோருக்கு இருக்கும் மிகப் பெரிய கேள்வி என்னவென்றால், ஒருவேளை அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தால், அதில் உக்ரைனுடன் புதின் என்ன விவாதிக்கத் தயாராக இருக்கிறார் என்பதே.
இரு நாட்டு தலைவர்களும் எவ்வளவு விரைவில் எங்கு எப்போது சந்திப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ட்ரம்ப் தனது முந்தைய ஆட்சியில் இருந்தபோது ஹெல்சின்கியில் புதினை சந்தித்து பேசினார். இந்த முறை ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கான ட்ரம்பின் சிறப்புத் தூதர் கீத் கெல்லாக், முதலில் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ட்ரம்பின் பதவியேற்புக்கு பிறகு அவரை சந்திக்க இருப்பதாக கூறியிருந்தார். ஆனால் அதுகுறித்த தெளிவான தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக அதிபர் வேட்பாளராக இருந்தபோது ஒரே நாளில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவேன் என்றும், கமலா ஹாரிஸ் உடனான விவாதத்தின் போது இன்னொருபடி மேலே சென்று அதிபர் ஆவதற்கு முன்பாகவே போரை நிறுத்திவிடுவேன் என்றும் சவடால் விட்டிருந்தார் ட்ரம்ப். ஆனால், அதன்பிறகு அது ஆறு மாத காலக்கெடுவாக மாறி, இப்போது எத்தனை நாட்கள் என்று அவருக்கே தெரியாத நிலையில் உள்ளது.
முன்னாள் அதிபர் ஜோ பைடன் இதுபோன்ற பல பொருளாதார தடைகளை ஏற்கெனவே ரஷ்யா மீது விதித்ததை உக்ரைன் போரை ஆரம்பம் முதல் கவனித்து வரும் பலரும் அறிந்த விஷயம். அவரது நிர்வாகம் கிட்டத்தட்ட அனைத்து ரஷ்ய தயாரிப்புகளையும் இறக்குமதி செய்வதைத் தடை செய்தது. மேலும், முக்கிய ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீதும் பரவலான தடைகளை விதித்தது.
எனவே, ட்ரம்ப் ஏற்கெனவே ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பைடனின் தடைகளை மட்டுமே பரிந்துரைக்கிறாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
ட்ரம்ப் உடைய நிபந்தனைகளுக்கு உட்பட்டால் இழப்பு என்னவோ உக்ரைனுக்குதான் அதிகம். ஒருவேளை பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால், யுத்தத்தில் உயிரிழந்த வீரர்கள், பொருளாதார பிரச்சினை என்ற அளவில் மட்டுமே ரஷ்யாவுக்கு இழப்பு ஏற்படும். அதையுமே கூட ஊடகங்களையும் எதிர்ப்பாளர்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் புதின் எளிதில் கடந்து விட வாய்ப்பு அதிகம்.
ஆனால், இன்னொருபுறம் உக்ரைன் நேட்டோ அமைப்பின் மூலம் எல்லை பாதுகாப்பை கோருகிறது. இது எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ரஷ்யா உடனான நேரடி முரண்பாட்டுக்கு மட்டுமே வழிவகுக்கும். இப்படியான இக்கட்டான சூழலில் ட்ரம்ப் போன்ற ஒரு மத்தியஸ்தரால் இரு நாடுகளுக்கும் இடையில் அமைதியை கொண்டு வரமுடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY