2-வது டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு 254 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பாகிஸ்தானுக்கு 254 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜனவரி 25) முல்தானில் தொடங்கியது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 163 ரன்களுக்கும், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 154 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.
முதல் நாளில் மட்டும் 20 விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. முதல் நாள் ஆட்டநேர முடிவில், மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானைக் காட்டிலும் 9 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இதையும் படிக்க: ஜோஃப்ரா ஆர்ச்சரை குறிவைத்தது ஏன்? திலக் வர்மா பதில்!
254 ரன்கள் இலக்கு
ஆட்டத்தின் இரண்டாம் நாளான இன்று (ஜனவரி 26) மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 ரன்கள் முன்னிலையுடன் அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் கேப்டன் கிரைக் பிரத்வெயிட் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 74 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டெவின் இம்லாச் 35 ரன்களும், அமிர் ஜாங்கோ 30 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் சாஜித் கான் மற்றும் நோமன் அலி தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். காசிஃப் அலி மற்றும் அப்ரார் அகமது தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: மகளிர் டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!
இரண்டாவது இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன் மூலம், மேற்கிந்தியத் தீவுகள் 253 ரன்கள் முன்னிலை பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு 254 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஷான் மசூத் மற்றும் முகமது ஹுரைரா தலா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பாபர் அசாம் 31 ரன்களிலும், கம்ரான் குலாம் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சௌத் ஷகில் 13 ரன்களுடனும், காசிஃப் அலி 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் வெற்றி பெற இன்னும் 178 ரன்களும், மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற இன்னும் 6 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.