Siragadikka aasai : ரோகிணியைப் பற்றிய உண்மை; வித்யா என்ன செய்வார்? - இந்த வாரம் ...
தென்காசி உள்பட 4 மாவட்டங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!
தென்காசி உள்பட 4 மாவட்டங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தென்காசி மாவட்ட தனிப்படை போலீஸ் கைது செய்தது. இதுகுறித்து, போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சென்னை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலமாக தொடா்பு கொண்ட மர்மநபா், தென்காசி உள்பட 4 மாவட்டங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்தார். இதைத்தொடா்ந்து போலீஸார், உஷார்படுத்தப்பட்டு முக்கிய இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது.
இதையடுத்து, போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பொய் என தெரியவந்ததை தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து விசாரிக்க, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் தனிப்படை அமைத்து உத்தரவிட்டாா்.
தொடர்ந்து, தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தியதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், விருதுநகா் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து விருதுநகர் மாவட்டம் வந்த தென்காசி தனிப்படையினர், சேத்தூர் அருகே பதுங்கியிருந்த திருச்சி மாவட்டம் வடக்கு காட்டூா் பகுதியை சேர்ந்த செய்யது அமீா் (27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்" என்றனர்.