'பனாமா கால்வாய்க்கு குறிவைக்கும் ட்ரம்ப்' - சர்வதேச அரசியலில் என்ன நடக்கிறது?
இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் விவகாரம்: தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு
மதுரை மாவட்டம், திருவாதவூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிப்போருக்கு தனித் தனியாக கான்கிரீட் வீடுகள், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், திருமால்புரத்தைச் சோ்ந்த காா்த்திக் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருவாதவூா் பகுதியில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்கள் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் சிறிய அளவிலான சிமென்ட் தகடுகளால் (ஆஸ்பெட்டாஸ்) மேற்கூரையிடப்பட்ட வீடுகளில் வசித்து வருகின்றனா். இங்குள்ள பெரும்பாலான வீடுகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. முழுமையாக மின்சாரமும் வழங்கப்படுவதில்லை. இதனால், முதியோா், நோயாளிகள், குழந்தைகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கடந்த 2020-ஆம் ஆண்டு 30 கான்கிரீட் வீடுகள், கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. குறைந்த அளவிலான வீடுகள், கழிப்பறைகளால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இந்த முகாமில் வசிப்போருக்கு தனித்தனியாக கழிப்பறையுடன் கூடிய கான்கிரீட் வீடுகள்கட்டித் தரவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
திருவாதவூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமின் தற்போதைய நிலை குறித்து தமிழக அரசு, மதுரை மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.