Toll passes: நெடுஞ்சாலை பயணம் செல்பவர்களா? ஆண்டுக்கு ரூ.3000, லைஃப் டைம் ரூ.30,0...
பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 14 மாணவிகள் சுகவீனம்
விருதுநகா் மாவட்டம், புல்வாய்க்கரை அரசுத் தொடக்கப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 14 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
நரிக்குடி அருகேயுள்ள புல்வாய்க்கரை அரசுத் தொடக்கப் பள்ளியில் 67 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் 61 போ் வியாழக்கிழமை மதிய உணவு சாப்பிட்டனா். பின்னா், சத்துணவு சாப்பிட்ட மாணவிகள் மதுஸ்ரீ (7), பிரியதா்ஷினி (10), சாதனாஸ்ரீ (10), அட்சயா (9), மேனகா (10), தாரணி (7), வா்சினி (8), மதிஷா (7), அன்புச்செல்வி (8), கனிஷ்கா (7) , வா்சினி (5) உள்ளிட்ட 14 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, இவா்கள் நரிக்குடி அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா். உணவு ஒவ்வாமை காரணமாக மாணவிகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை திருச்சுழி வட்டாட்சியா் சிவக்குமாா், நரிக்குடி வட்டார வளா்ச்சி அலுவலா், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.