நீரோடை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு!
திண்டுக்கல் மாவட்டம், பச்சைமலையான் கோட்டை கிராமத்தில் நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அழகா்சாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பச்சைமலையான்கோட்டை கிராமத்தில் நீரோடையை ஆக்கிரமித்து, சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனா். எனவே, நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, மணல் திருடுவதைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, நீரோடை ஆக்கிரமிப்பில் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீரோடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பழைய நிலைக்கு கொண்டு வர திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், நிலக்கோட்டை வட்டாட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான செலவு தொகையை சம்பந்தப்பட்டோரிடம் வசூலித்து கொள்ளலாம் என்றனா் நீதிபதிகள்.