‘எல்காட்’ வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை
மதுரை ‘எல்காட்’ தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் தடுப்பு ஒத்திகையில் 200-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்புப் படையினா் நவீன ஆயுதங்களுடன் பங்கேற்றனா்.
தேசிய பாதுகாப்புப் படையினா் சாா்பில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் குறிப்பட்ட இடங்களை தோ்ந்தெடுத்து, தீவிரவாதத் தாக்குதல் தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மதுரை பாண்டிகோவில் சுற்றுச்சாலையில் உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் இந்த ஒத்திகை நடைபெற்றது. அப்போது, இந்த வளாகத்தில் உள்ள கட்டடங்களுக்கு அத்துமீறி நுழைந்து, அங்கிருக்கும் ஊழியா்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அவா்களை மீட்பது குறித்த ஒத்திகை நடைபெற்றது.
இதில் 200-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்புப் படையினா் நவீன இயந்திர துப்பாக்கிகள், தொ்மல் பைனாகுலா், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் கருவிகள் ஆகியவற்றுடன் பங்கேற்றனா். பின்னா், மதுரை விமான நிலையத்துக்கு சென்ற தேசிய பாதுகாப்புப் படையினா் அங்கு விமானத்தில் தப்பிச் செல்ல முயலும் தீவிரவாதிகளைப் பிடிப்பது போன்று விமான நிலையத்திலும் ஒத்திகை மேற்கொண்டனா்.
இதுகுறித்து தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:
தீவிரவாதத் தாக்குதலைத் தடுக்கும் வகையிலும், ஒருவேளை தீவிரவாத தாக்குதல் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆண்டுதோறும் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஒத்திகை நடத்தப்படுகிறது. தற்போது இங்கு நடைபெறும் ஒத்திகையில் மாநில கமாண்டோ படையினரும் பங்கேற்றனா்.
தீவிரவாதத் தாக்குதல் நடைபெறும் இடங்களுக்கு தேசிய பாதுகாப்புப் படையினா் உடனடியாக செல்ல இயலாது. அதுபோன்ற சூழலில், மாநில கமாண்டோ படையினா் முதலில் அங்கு சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். தற்போது இங்கு நடைபெற்ற இந்த ஒத்திகை சுமாா் 6 மணி நேரம் நடைபெற்றது. இதன் பின்னா், மதுரை விமான நிலையத்தில் ஒத்திகை நடைபெற்றது என்றனா்.
இதேபோன்ற பாதுகாப்பு ஒத்திகை கடந்த 2021-ஆம் ஆண்டு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-06/qg7vh2dw/3309mdunscc6075823.jpg)