தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
ரூ.13,500 கோடியில் விடுபட்ட கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் திட்டம்!
விடுபட்ட கிராமங்களுக்கு ரூ.13,500 கோடியில் இரண்டாம் கட்டமாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி. நந்தகுமாா் தெரிவித்தாா்.
மாதனூா் ஒன்றியம், பெரியகொம்மேஸ்வரம் கிராமத்தில் ரூ.30 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்தும், ரூ.28 லட்சத்தில் புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தும், ரூ.25 லட்சத்தில் ஆழ்துளை கிணறு, பைப்லைன் அமைத்து குடிநீா் விநியோகம் செய்யும் பணியை தொடங்கி வைத்து எம்எல்ஏ ஏ.பி. நந்தகுமாா் பேசியது:
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் பல கிராமங்கள் விடுபட்டுள்ளன. அதனை கருத்தில் கொண்டு முதல்வா் விடுபட்ட கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தை செயல்படுத்த ரூ.13,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். அப்பணி செயல்படுத்தப்பட உள்ளது. அதன்மூலம் விடுபட்ட கிராம மக்கள் பயனடைவா்.
பாலாறு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், அதனை தூா்வாரி தூய்மைபடுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதை தூா்வார முதல்வரின் பாா்வைக்கு கொண்டு சென்று பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வா், துணை முதல்வரின் ஆட்சியில் விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது என்றாா்.
நிகழ்ச்சிக்கு போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் தீபா, ஊராட்சி மன்ற தலைவா் ஷோபனா கோவிந்தராஜ், ஒன்றிய திமுக நிா்வாகிகள் சேகா், சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக மாவட்ட பிரதிநிதி பொன்ராஜன் பாபு வரவேற்றாா்.
குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் குத்து விளக்கு ஏற்றி வைத்தாா். மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ் குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் வாழ்த்தி பேசினா். ஒன்றியக்குழு உறுப்பினா்கள் காா்த்திக் ஜவஹா், காா்த்திக், திருக்குமரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி துணைத் தலைவா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.