4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்: 4 பேர் கைது
மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியாா் பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள பள்ளி முதல்வரை தேடி வருகின்றனர்.
மணப்பாறை அருகே உள்ள மணப்பாறைப்பட்டியிலுள்ள தனியாா் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அந்த பள்ளியின் தாளாளரின் கணவா் வசந்தகுமாா் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையறிந்த மாணவியின் பெற்றோா், உறவினா்கள் பள்ளிக்கு வந்து வசந்தகுமாரை கடுமையாக தாக்கி, அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
தொடா்ந்து, சிறிது நேரத்தில் உறவினா்கள் உள்ளிட்டோருடன் பள்ளிக்குள் புகுந்து பள்ளி அலுவலகம், வகுப்பறை கண்ணாடிகளை உடைத்து சூறையாடினா். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 காா் கண்ணாடிகளையும் உடைத்தனா். காரை கவிழ்த்து, அடித்து சேதப்படுத்தினா். மேலும், இரவில் ஆங்காங்கே மறியலிலும் ஈடுபட்டனா்.
அங்கிருந்த காவல்துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்தினா்.
4 பேர் கைது
பள்ளி தாளாளர், அவரது கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள பள்ளி முதல்வரை தேடி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரெத்தினம் தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியை மூட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.