மசோதாவை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை: ஆளுநர் தரப்பு வாதம்
அனைத்து சூழ்நிலைகளிலும் மசோதாவை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் ஆளுநருக்கு 4 முக்கிய அதிகாரங்கள் உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுவருவதாகவும், தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநர் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இன்றைய விசாரணையில் ஆளுநர் தரப்பு பல்வேறு வாதங்களை முன்வைத்துள்ளது.
'ஆளுநர் எல்லா சூழ்நிலைகளிலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஆளுநருக்கு 4 முக்கிய அதிகாரங்கள் உள்ளன. மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது, நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது, அதிருப்தியை தெரிவிப்பது.
தமிழக அரசின் மசோதாக்களில் இருதரப்புக்குமான சாதகமான பரிந்துரைகளை சேர்க்கவே ஆளுநர் முயற்சிக்கிறார்.
ஆளுநர் சில முரணான காரணங்களுக்காக ஒப்புதல் வழங்காமல் இருப்பார் என்றால், அரசு மற்றும் ஆளுநர் என இரு தரப்பும் இணைந்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்.
குறிப்பாக, இதன் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு அனுப்புங்கள் என்று மாநில அரசே ஆளுநரை கேட்க வைக்கலாம். எனவே, இதில் எதுவும் மாநில உரிமையை பறிப்பதாக கருத முடியாது.
ஆளுநர் அரசியலமைப்பு பிரிவு 200-ல் விதி 1ன் கீழ் முடிவெடுத்தே ஆகவேண்டும் என்று கூறுவது, பிரிவு 200ஐ முரணாக திரித்து கூறுவதாக ஆகும்' என்று ஆளுநர் தரப்பு கூறியது.
முன்னதாக நீதிபதிகள், 'ஆளுநர் எதுவும் விளக்கமளிக்காமல் மசோதாவை திரும்ப அனுப்பினால், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது எப்படி தெரியும்?
சம்மந்தப்பட்ட மசோதாவில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்றால் அரசுக்கு எப்படி தெரியும்?
சம்மந்தப்பட்ட மசோதா மீது தான் ஒப்புதல் கொடுக்க முடியாது என்பதை ஆளுநர் எப்படி உணர்ந்தார்?' என கேள்வி எழுப்பினர்.
"துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த நடைமுறை மத்திய சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அவற்றுக்கு ஆளுநர் எவ்வாறு ஒப்புதல் அளிப்பார்?" என ஆளுநர் தரப்பு கேள்விக்கு நீதிபதிகள், "பல்கலைக்கழக மசோதா மத்திய சட்டத்துக்கு எதிராக இருந்தால் அடுத்த நடவடிக்கை என்ன? மாநில அரசு எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள்? ஆளுநர் அரசுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். மசோதா விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது" என்று தெரிவித்தனர்.