மேற்கு வங்கம்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலி
``தையல் போட்டால் தழும்பு வரும்'' -காயத்தில் Fevi kwik போட்டு ஒட்டிய செவிலியர்... கர்நாடக அதிர்ச்சி!
கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆரம்ப சுகாதார மையம். இந்த மருத்துவமனைக்கு கடந்த ஜனவரி 14-ம் தேதி கன்னத்தில் ஆழமான காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட குருகிஷன் அன்னப்ப ஹோசாமணி என்ற 7 வயது சிறுவனை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றிருக்கின்றனர். அப்போது பணியில் இருந்த செவிலியர் ஜோதி, தையலிட்டு, மருந்திட வேண்டிய காயத்துக்கு உடைந்தப் பொருள்களை ஒட்டவைக்கப் பயன்படுத்தப்படும் Fevi kwik-க்கைத் தடவியிருக்கிறார். அப்போதே சிறுவனின் பெற்றோர் அதை வீடியோவாகப் பதிவு செய்திருக்கின்றனர்.
அந்த வீடியோவில் பேசும் செவிலியர் ஜோதி, ``குழந்தையின் முகத்தில் தையல் போட்டால் தழும்பு ஏற்படும். அதனால்தான் fevi kwik -னை பயன்படுத்தினேன். நான் இவ்வாறு பல ஆண்டுகளாக செய்து வருகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர், அந்த வீடியோவை ஆதாரமாக வைத்து, காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து மாநில அரசு அந்த செவிலியரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் அந்த செவிலியர் ஹாவேரி தாலுகாவில் உள்ள குத்தல் சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாகப் சுகாதார மற்றும் குடும்ப நல சேவைகள் ஆணையர் அலுவலகத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, ``fevi kwik என்பது ஒருவகையான பிசின். விதிமுறைகளின் படி இதனை மருத்துவம் சார்ந்தவைக்கு பயன்படுத்தக் கூடாது. ஆனால் பணியில் இருந்த செவிலியர் தனது கடமையை தவறி fevi kwik -னை பயன்படுத்தியதால் அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் .மேலும் இச்சம்பவம் குறித்த சில விசாரணை நிலுவையில் உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.