'மலக்குழி மரணம்; புகாரளிக்க சென்றவர்களை அலைக்கழித்த காவல்துறை' - சென்னை சூளைப்பள...
மகா கும்பமேளா: 40 கோடியைத் தாண்டிய புனித நீராடிய பக்தர்கள்!
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடி பக்தர்களின் எண்ணிக்கை 40 கோடியைத் தாண்டியுள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனர். மகா கும்பமேளா பிப்ரவரி 26 அன்று முடிவடைகிறது.
மகர சங்கராந்தி, மௌனி அமாவாசை, பசந்த் பஞ்சமி ஆகிய மூன்று புனித அமிர்த ஸ்நான விழாக்கள் முடிவடைந்த நிலையிலும், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் புனித நீராடுவதற்காகத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள்.
மௌனி அமாவாசையன்று மட்டும் சுமார் 8 கோடி பக்தர்கள் புனித நீராடினர், மகர சங்கராந்தி அன்று சுமார் 3.5 கோடி பக்தர்களும், வசந்த பஞ்சமியன்று 2.57 கோடி பக்தர்களும், ஜனவரி 30, பிப் 1 ஆகிய தேதிகளில் தலா 2 கோடிக்கும் அதிகமான பக்தர்களும், பௌஷ் பூர்ணிமா அன்று 1.7 கோடி பக்தர்களும் நீராடினர்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலங்களவை எம்.பி. சுதா மூர்த்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நீராடினர்.
ஹேமா மாலினி, அனுபம் கெர் போன்ற நடிகர்கள், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால், நடன இயக்குனர் ரெமோ டிசோசா உள்ளிட்ட பிரபலங்களும் புனித நீராடினர்.
மேலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புனித நீராட வருகை தர உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.