2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? ஷுப்மன் கில் பதில்!
வெடிக்கும் `வர்த்தகப் போர்?’ - அமெரிக்க வரி விதிப்புக்கு சீனா கொடுத்த அதிரடி பதிலடி!
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களுக்கு 10 சதவீத வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இந்த உத்தரவு செவ்வாய்க்கிழமை (பிப்.4) காலை முதல் அமலுக்கு வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவுக்கு எதிராக அதிரடியான பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது சீன அரசு.
அமெரிக்காவின் நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மீது 15% வரியும், கச்சா எண்ணெய், விவசாய இயந்திரங்கள், பெரிய கார்கள் மற்றும் பிக்கப் டிரக்குகள் மீது 10% வரியும் விதிக்கப்படுவதாக சீனாவின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் வரும் பிப்ரவரி 10 முதல் அமலுக்கு வருகின்றன.
கூடவே, சீனாவின் வர்த்தக அமைச்சகம் மற்றும் சுங்கத் துறை ஆகியவை, ஏராளமான உலோகப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் உடனடியாக அமலுக்கு வரும் புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. அவற்றில் தொழில்துறை மற்றும் பாதுகாப்பு பயன்பாடுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான கனிமமான டங்ஸ்டன் மற்றும் சூரிய மின்கலங்களை உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய டெல்லூரியம் ஆகியவையும் அடக்கம்.
மேலும், அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களான இல்லுமினா மற்றும் கால்வின் க்ளெய்ன், டாமி ஹில்ஃபிகர் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனமான பிவிஎச் குழுமம் ஆகியவை சீனாவின் வர்த்தகக் கொள்கைகளை மீறியதாக கூறி நம்பகத்தன்மையற்ற நிறுவனங்களின் பட்டியலில் சேர்ப்பதாகவும் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பதில் வேகம் காட்டும் சீனா..!
சீன நிறுவனங்களின் செயல்பாடுகளில் பிவிஎச் குழுமம், பாகுபாடு காட்டி தலையிட்டதைக் கண்டறிந்ததாக வர்த்தக அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனினும் அதுகுறித்த விவரங்கள் எதையும் அவர் வழங்கவில்லை.
சீன அரசின் இந்த குற்றச்சாட்டுக்கு பிவிஎச் குழுமம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. சீனாவில் எங்கள் 20 ஆண்டுகால செயல்பாடுகளிலும், கொள்கை ரீதியாக எங்கள் நுகர்வோருக்கு பெருமையுடன் சேவை செய்வதிலும், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் கடுமையான இணக்கத்தை பேணி, தொழில்துறை தரநிலைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப செயல்படுகிறோம் என்று பிவிஎச் குழுமம் தெரிவித்துள்ளது.
இன்னொரு பக்கம், சீனாவின் சந்தை ஒழுங்குமுறைக்கான நிர்வாகம், அமெரிக்காவின் கூகுள் நிறுவனம், அதன் ஏகபோக தடுப்பு (anti-monopoly) விதிமுறைகளை மீறியதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்காக விசாரணையைத் தொடங்குவதாகக் கூறியுள்ளது. சீனாவில் கூகுள் நிறுவனம் மிகக் குறைந்த செயல்பாடுகளை மட்டுமே கொண்டுள்ளது.
அமெரிக்கா அறிவித்த 10 சதவீத வரிவிதிப்பு பதிலடி கொடுக்கும் விதமாகவே அடுக்கடுக்கான புதிய கட்டுப்பாடுகளை அவசர அவசரமாக சீனா உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் இந்த நடவடிக்கைகள் மிகவும் மிதமானவை தான் என்றும், குறைந்தபட்சம் அமெரிக்க நகர்வுகளுடன் ஒப்பிடும்போது, அதிக சேதத்தை ஏற்படுத்தாமல் அமெரிக்காவுக்கு இவை ஒரு செய்தியை அனுப்புவதற்கான ஒரு முயற்சி மட்டுமே என்கின்றனர் சீன பொருளாதார நிபுணர்கள்.
சீனாவின் வரி விதிப்புகள், அமெரிக்காவிலிருந்து ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் அதிகபட்சம் 20 பில்லியன் டாலர்களை இலக்காகக் கொண்டுள்ளன. இது மொத்த இறக்குமதியில் சுமார் 12 சதவீதம் ஆகும்.
அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள சீன வர்த்தக அமைச்சகம், “அமெரிக்காவின் வரிவிதிப்பு அடிப்படை வர்த்தக அமைப்பை தகர்க்கிறது. மேலும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பின் அடித்தளத்தை இது குறைத்து மதிப்பிடுகிறது. உலகளாவிய தொழில்துறை சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலியின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
மூளும் வர்த்தக போர்?
சீனா புத்தாண்டு விடுமுறையின் இறுதி நாளில் அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள், வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்குக்கும் இடையே ஒரு புதிய வர்த்தகப் போரின் தொடக்கமாக இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை அல்லது ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லாமல் இல்லை.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் மெக்ஸிகோ மற்றும் கனடாவை குறிவைத்து ஏராளமான வர்த்தக நடவடிக்கைகளை அமெரிக்கா கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாகவே சீன இறக்குமதிகளுக்கு 10% வரிகளை அமெரிக்கா அறிவித்தது.
இதில் மெக்ஸிகோ மற்றும் கனடா மீதான வரிவிதிப்புகளை இரு நாட்டுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்காலிகமாக நிறுத்திவைத்தார் ட்ரம்ப். இரு நாடுகளும் அமெரிக்க எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துவதாக உறுதியளித்ததன் பேரில் இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது. ஆனால் சீனா மீதான வரிவிதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.
சீன அதிபரி ஜின் ஜின்பிங் உடன் ட்ரம்ப் பேச இருப்பதாக அமெரிக்க செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ஆனால் இதுகுறித்த எந்த தகவலையும் சீன அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் உள்ள போதைப்பொருள் விற்பனையாளர்களால் இயக்கப்படும் ஆய்வகங்களில் உருவாகும் ஃபெண்டானைல் போதைப்பொருளை தயாரிக்க பல சீனா நிறுவனங்கள் முக்கிய ரசாயனங்களை வழங்குவதாக அமெரிக்க நம்புகின்றது. இதில் கனடா சார்பில் பறிமுதலாகும் ஃபெண்டானைல் போதைப்பொருட்கள் வெறும் 0.2% மட்டுமே.
ஃபெண்டானைல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை சீனா மேற்கொண்டுள்ளதாக கூறுகிறது. ஆனால் அமெரிக்காவின் இந்த சமீபத்திய வரிகள் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் அடித்தளத்தை அழித்துவிடும் என்றும் சீனா தெரிவிக்கிறது.
10% வரிவிதிப்பு என்பது, ட்ரம்ப் தனது பிரசாரத்தின் போது சீனா மீது விதிக்கப்போவதாக அச்சுறுத்திய 60% வரிவிதிப்புடன் ஒப்பிடுகையில் குறைவுதான் என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால் இது இன்னும் அதிகரிக்கக் கூடும் என்பதற்கான சமிக்ஞையாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதை விட மோசமான சூழல் என்னவென்றால் சீனா மட்டுமின்றி மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய மூன்று வழி வர்த்தகப் போரை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டாகவும் இந்த ‘வரி மோதல்’ வழிவகுக்கும் என்பதுதான். இது அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க பொருளாதார தேக்கத்துக்கு வழிவகுக்கும் என்றும், இந்த ஆண்டு பொருளாதாரம் 0.8% ஆகவும், அடுத்த ஆண்டு -1.1% ஆகவும் சுருங்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs