இந்தியர்களுக்கு கை விலங்கு: `சட்டப்படிதான் அமெரிக்கா நடந்தது, ஆனால்..' -ஜெய்சங்கர் சொல்வதென்ன?
அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய 104 இந்தியர்களை முதல் கட்டமாக வெளியேற்றியுள்ளது அமெரிக்கா. அவர்கள் அமெரிக்காவின் சி17 ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.
ட்ரம்ப் அதிபரான பிறகு, அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய பிற நாட்டு மக்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி வருகிறது அமெரிக்கா.
அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே!
அமெரிக்க அரசின் தரவுகளின் படி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை, சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய கிட்டதட்ட 1,60,000 பேரை அவர்களுடைய சொந்த நாடான இந்தியா உள்ளிட்ட 145 நாடுகளுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. இந்த நடைமுறை, தற்போது, ட்ரம்ப் பதவியேற்றப் பிறகு இன்னும் கடுமையாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ட்ரம்பின் முக்கிய தேர்தல் பிரசாரமே, 'அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே'. ட்ரம்ப் உள்ளிட்ட பெரும்பாலான பாரம்பரிய அமெரிக்கர்களுக்கு, 'வேலைவாய்ப்பு முதல் அனைத்திலும் பிற நாட்டு மக்கள் தங்களின் வாய்ப்பை பறிக்கின்றனர்' என்பது மனநிலை ஆகும்.
ஆக, 'சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றுவது' ட்ரம்பின் அதிரடி முடிவுகளில் மிக முக்கியமான ஒன்று. அமெரிக்க அரசின் தரவுகளின் படி, அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் கிட்டதட்ட 7.25 லட்சம் உள்ளது.
சர்ச்சைக்கு மேல் சர்ச்சை
இப்படி இருப்பவர்களை கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமாக வெளியேற்ற தொடங்கியுள்ளது ட்ரம்பின் அரசு. அதன்படி தான், தற்போது முதல்கட்டமாக 104 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதுவும் சி17 ராணுவ விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது குற்றவாளிகளை அணுகுவது போல உள்ளது என முதலில் சர்ச்சை வெடித்தது. பின்பு, இந்தியர்களை வெளியேற்றி, விமானம் மூலம் இந்தியா கொண்டு வருகிறார்கள் என்ற தகவலை முதலிலேயே இந்திய அரசு தெரிவிக்கவில்லை என்று அடுத்த சர்ச்சை எழுந்தது.
விமானத்தில் இருந்து கீழிறங்கிய இந்தியர்கள், "எங்களை விமானத்தில் ஏற்றும்போது கைவிலங்கிட்டிருந்தனர். விமானத்திலும் கைகளிலும், கால்களிலும் விலங்கிட்டிருந்தனர். ஆனால், அமிர்தசரஸ் விமான நிலையம் வந்ததும் அதை நீக்கிவிட்டனர்" என்று கூறியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இப்படி சர்ச்சைகளின் எண்ணிக்கை ஒவ்வொன்றாக கூடிக்கொண்டிருக்க, இந்திய அரசு தன் வாயை திறக்கவே இல்லை.
தயார்...தயார்...தயார்
இதற்கு, எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது. இதனால், இன்று கூடிய மாநிலங்களவை, எதிர்க்கட்சிகளின் அமளியால், பிற்பகல் 12.00 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அமெரிக்க அதிபராக பதவியேற்றப்பின், சட்டத்திற்கு புறம்பாக குடியேறியுள்ள வெளிநாட்டவரை வெளியேற்றுவோம் என்று ட்ரம்ப் கூறியப்போதே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "அப்படி அனுப்பும் இந்தியர்களை இந்தியா ஏற்க தயார்" என்று கூறியிருந்தார். இந்தியா விமானம் அனுப்பக்கூட தயராகத் தான் இருந்தது. ஆனால், சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்கா முந்திக்கொண்டது.
இந்தியாவிற்கு மட்டுமல்ல...
கண்டனம்... அமளி என தொடர்ந்து சர்ச்சையாகி கொண்டிருக்க, இன்று மதியம் கிட்டதட்ட 12 மணியளவில், பிரதமர் மோடியை சந்தித்தார் ஜெய்சங்கர். சந்திப்பிற்கு பிறகு நாடாளுமன்றத்தில் பேசிய ஜெய்சங்கர், "குடியேற்றம் மற்றும் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பயணம் இந்தியா - அமெரிக்க உறவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக குடியேறுவது சட்டத்திற்கு புறம்பான சில விஷயங்களையும் கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை தாங்களே சட்டத்திற்கு புறம்பான விஷயங்களால் பாதிக்கப்பட்டுளளனர்.
அவர்கள் அப்படி பயணம் செல்லும்போதும், பணியாற்றும் இடத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் மரணம் கூட அடைந்துள்ளனர். இதுக்குறித்து, பாதிக்கப்பட்டவர்களே கூறியுள்ளனர்.
உலக அளவில் வெளியுறவுத் துறையில், இப்படி மக்களை வெளியேற்றுவது புதிதல்ல. இது இந்தியாவிற்கு மட்டுமல்ல... அனைத்து நாட்டையும் சாரும்.
இது 2009-ம் ஆண்டில் இருந்து நடந்துவருகிறது. நமது தரவுகளின் படி, சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களில் 2009-ம் ஆண்டு 734 பேரும், 2010-ம் 799 ஆண்டு பேரும், 2011-ம் ஆண்டு 597 பேரும், 2012-ம் ஆண்டு 530 பேரும், 2013-ம் ஆண்டு 550 பேரும், 2014-ம் ஆண்டு 591 பேரும், 2015-ம் ஆண்டு 708 பேரும், 2016-ம் ஆண்டு 1303 பேரும், 2017-ம் ஆண்டு 1024 பேரும், 2018-ம் ஆண்டு 1118 பேரும், 2019-ம் ஆண்டு 2042 பேரும், 2020-ம் ஆண்டு 1889 பேரும், 2021-ம் ஆண்டு 805 பேரும், 2022-ம் ஆண்டு 862 பேரும், 2023-ம் ஆண்டு 670 பேரும், 2024-ம் ஆண்டு 1368 பேரும், 2025-ம் ஆண்டு இதுவரை 104 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மாற்றம் இல்லை
அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கம் (ஐ.சி.இ) இந்த வெளியேற்றங்களை செய்து வருகிறது. 2012-ம் ஆண்டு முதல், சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை ராணுவ விமானத்தில் தான் வெளியேற்றி வருகிறது, அமெரிக்கா.
மேலும், அமெரிக்கா சட்டப்படி, சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை கையிலங்கிடுவது முறையானது தான்.
ஐ.சி.இ அமைப்பு நமக்கு கொடுத்துள்ள தகவலின் படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் கைவிலங்கிடப்படவில்லை. உணவு முதல் ஏதாவது மருத்துவ அவசரம் வந்தால், அதைப் பார்த்துகொள்வது வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயணிகள் கழிவறை செல்ல விருப்பப்படும்போது, விலங்குகள் நீக்கப்பட்டிருக்கின்றனர். இதில் எந்த மாற்றமும் இல்லை.
வீடியோ...
நாமும் அமெரிக்கா அரசு மக்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
நம் நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக பயணம் செய்வதை கடுமையாக தடுக்க வேண்டும். இதனை தடுக்க, விசா நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். இதில் பயணம் செய்த மக்கள் கூறிய ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை விமானத்தில் ஏற்றும் வீடியோ வெளியிட்டுள்ளது அமெரிக்கா எல்லை படை. அதில் இந்தியர்கள் மட்டுமல்ல...பிற நாட்டவரும் அவர்கள் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மனிதாபிமானம் அடிப்படையிலாவது...
இப்படி கைவிலங்கிட்டு அனுப்பப்படுவது முதல்முறையல்ல. 2013-ம் ஆண்டிலும் நடந்துள்ளது.
அமெரிக்கா பொறுத்தவரை, இவர்கள் 'குற்றவாளிகள்' தான். ஆனால், இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியதை தவிர, அந்த நாட்டில் எந்த குற்றமும் செய்யவில்லை. மேலும், மனிதாபிமான அடிப்படையிலாவது, இவர்கள் கண்ணியமாக நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
இந்தியா இன்னும் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்திருக்கலாம் என்பது விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
இந்த வெளியேற்றம் இத்துடன் முடிவு பெற்றுவிடாது. இன்னும் தொடரும். அந்த இந்தியர்களே தானாக நாடு திரும்பிவிட்டால், அவர்களுக்கு கண்ணியம் மிஞ்சும் என்பது தான் ட்ரம்ப் அரசின் நிலை.