திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம்!
`ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்து' -60 ஆண்டுகால நண்பருக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா..!
தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானார். அவர் காலமாவதற்கு முன்பாக ஒரு உயில் எழுதி வைத்துள்ளார். அந்த உயிலில் தனது தனிப்பட்ட சொத்தில் யாருக்கு என்ன கொடுக்கவேண்டும் என்பது குறித்து விரிவாக எழுதி இருக்கிறார். அதில் ரத்தன் டாடாவுக்கு சமையல் செய்து கொடுத்தவர், உதவியாக இருந்தவர் என தன்னுடன் கடைசி வரை இருந்த அனைவருக்கும் சொத்தில் பங்கு எழுதி வைத்திருக்கிறார். அந்த உயிலின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரத்தன் டாடா தெரிவித்தபடி சொத்துக்களை கொடுக்கும் பணியில் டாடா குடும்பம் ஈடுபட்டுள்ளது. ரத்தன் டாடா தான் ஆசையாக வளர்த்த நாய்களுக்கு கூட சொத்தில் உயில் எழுதி வைத்திருக்கிறார். உயிலில் மோஹினி மோகன் தத்தா என்ற நபருக்கு ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துகளை ரத்தன் டாடா எழுதி வைத்திருக்கிறார். இது ரத்தன் டாடா குடும்பத்திற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/nb9yn06i/ratan-tata-img.jpg)
மோஹினி மோகன் குறித்து ரத்தன் டாடாவிற்கு நெருக்கமானவர்களுக்கு நன்றாக தெரியும் என்றும், அவர் ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர் என்றும் டாடா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டு ரத்தன் டாடாவின் பிறந்த நாளுக்கு கூட மோஹினி மோகன் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தார் என்றும், இந்நிகழ்வுக்கு ரத்தன் டாடாவிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர் என்று டாடா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மோஹினி மோகன் இதற்கு முன்பு ஸ்டாலியன் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் டாடா நிறுவனத்தில் 20 சதவீத பங்குகள் இருந்தது. 2013-ம் ஆண்டு தாஜ் குரூப் ஆப் ஹோட்டலில் மோஹினி மோகன் தனது நிறுவனத்தை இணைத்துவிட்டார். மோஹினி மோகனின் மகள் டாடா டிரஸ்டில் கடந்த ஆண்டு வரை வேலை செய்துள்ளார்.
ரத்தன் டாடாவும், மோஹினி மோகனும் கடந்த 60 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தனர். ரத்தன் டாடாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்தபோது மோஹினி மோகன் அளித்த பேட்டியில், ரத்தன் டாடாவிற்கு 24 வயதாக இருந்த போது முதல் முறையாக அவரை சந்தித்தேன். எனது வளர்ச்சிக்கு ரத்தன் டாடா மிகவும் உதவி செய்தார். அவருடன் எனக்கு 60 ஆண்டு நட்பு இருந்தது என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது மோஹினி மோகனுக்கு 74 வயதாகிறது. ரத்தன் டாடா எழுதி வைத்துள்ள உயில் படி ரத்தன் டாடா எஸ்டேட்டில் மூன்றில் ஒரு பங்கை மோஹினி மோகனுக்கு கொடுக்கவேண்டும். மூன்றில் ஒரு பங்கு என்பது 650 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதி இரண்டு பகுதி ரத்தன் டாடாவின் இரு சகோதரிகளுக்குச் செல்லும். உயிலில் ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா மற்றும் அவரது குழந்தைகளின் பெயர்கள் இல்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/wg7mfoth/ratan-tata-071239935-16x90.avif)
அதேசமயம் ரத்தன் டாடாவின் சகோதரர் ஜிம்மி டாடாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. உயில் படி அவருக்கு 50 கோடி கிடைக்கும். ரத்தன் டாடா உயிலில் எழுதி வைத்தபடி தனக்குறிய பங்கை கொடுக்கவேண்டும் என்று மோஹினி மோகன் தெரிவித்துள்ளார். மோஹினி மோகன் ஆரம்பத்தில் டாடா நிறுவனத்திற்கு சொந்தமான தாஜ் ஹோட்டலிலும், அதனை தொடர்ந்து டாடா இண்டஸ்ட்ரியிலும் வேலை செய்தார். அதன் பிறகுதான் சொந்த கம்பெனி ஆரம்பித்து அதனையும் டாடாவோடு இணைத்துவிட்டார். ரத்தன் டாடா எழுதி வைத்திருக்கும் உயிலை அமல்படுத்தும் பொறுப்பு ரத்தன் டாடாவின் வளர்ப்பு சகோதரிகள், டாடா டிரஸ்ட் ஆகியோரை சேர்ந்தது ஆகும். அவர்கள் ரத்தன் டாடா எழுதி வைத்த உயில் படி சொத்தை பிரித்து கொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.