திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம்!
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம்? கேஜரிவாலை விசாரிக்க வந்த ஊழல் தடுப்புப் பிரிவு!
ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களிடம் பாஜகவினர் பேரம் பேசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை விசாரிக்க வந்த ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், சனிக்கிழமை காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், வெற்றிபெற வாய்ப்புள்ள ஆம் ஆத்மி வேட்பாளர்கள் சிலரை பாஜகவினர் தொலைபேசியில் அழைத்து, தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்னதாகவே கட்சி மாறினால் ரூ. 15 கோடி அளிப்பதாக பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிக்க : மகாராஷ்டிர தேர்தல்: 5 மாதத்தில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது எப்படி? ராகுல் கேள்வி
ஆம் ஆத்மி கட்சியினர் எழுப்பிய இந்த குற்றச்சாட்டை விசாரிக்க தில்லி தலைமைச் செயலாளருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், தில்லியில் உள்ள அரவிந்த் கேஜரிவாலின் வீட்டுக்கு தில்லி ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் வருகை தந்துள்ளனர்.
ஆனால், அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் உள்ளே அனுப்ப ஆம் ஆத்மி வழக்கறிஞர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால், அரைமணி நேரத்துக்கு மேலாக கேஜரிவாலின் வீட்டு வாசலில் ஊழல் தடுப்புப் பிரிவினர் காத்துக் கொண்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களுடன் ஆம் ஆத்மி வழக்கறிஞர் பேசியதாவது,
“முறையான ஆவணங்களின்றி கேஜரிவாலை விசாரிக்க வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரைமணிநேரமாக யாருடனோ தொலைபேசியில் அதிகாரிகள் உரையாடி வருகின்றனர்.
ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக புகார் அளிப்பதற்காக ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு சஞ்சய் சிங் சென்றுள்ளார். ஆனால், இவர்கள் கேஜரிவாலை விசாரிக்க வந்துள்ளனர்.
அரசியல் நாடகத்தை உருவாக்க பாஜக சதி செய்கிறது. சட்டப்பூர்வமாக அனுமதி பெறாமல் யாரும் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.