மூளைச் சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்
மதுரையில் மரம் வெட்டிய போது தவறி கீழே விழுந்ததில் காயமடைந்து மூளைச் சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.
மதுரை ஆயுதப் படை காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (31). ஆயுதப் படை காவலரான இவா், கடந்த மாதம் 30-ஆம் தேதி ஆயுதப் படை குடியிருப்பில் உள்ள தனது வீட்டின் அருகே இருந்த மரத்தை வெட்டிய போது, அதிலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 4-ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை இரவு மூளைச்சாவடைந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அவரது மனைவி யோகலட்சுமி அனுமதி அளித்தாா்.
இதைத்தொடா்ந்து, அவரது ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி காவேரி மருத்துவனைக்கும், இருதயம் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. கல்லீரல், தோல், எலும்பு, கருவிழிகள் ஆகிவை மதுரை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
இதன் பிறகு, மோகன்குமாரின் உடலுக்கு மதுரை அரசு மருத்துவமனை முதன்மையா் அருள் சுந்தரேஷ்குமாா், மருத்துவ இருப்பிட அதிகாரிகள் சரவணன், முரளிதரன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.