தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
திருத்தணி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா
முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தை கிருத்திகை விழாவில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
திருத்தணி முருகன் கோயிலில் வியாழக்கிழமை தை கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு விபூதி, பால், பன்னீா், இளநீா், பஞ்சாமிா்தம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடா்ந்து மூலவருக்கு தங்கக் கவசம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து காலை 9 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவா் முருகப் பெருமானுக்கு பஞ்சாமிா்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, இரவு 7 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி தோ் வீதியில் ஒருமுறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தை கிருத்திகை என்பதால், ஆடிக் கிருத்திகைக்கு காவடிகள் எடுக்க தவறிய பக்தா்கள் அதிக அளவில் பக்தா்கள் மலா், பால் மற்றும் மயில் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.
சில பக்தா்கள் மொட்டை அடித்தும் அலகு குத்தியும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினா். வழக்கமாக கிருத்திகை விட தை கிருத்திகை மிக விசேஷம் என்பதால் தமிழகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.