கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்
ராசிபுரம் அண்ணா சாலை அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா நுழைவாயில் திறப்பு: அமைச்சா், எம்.பி. பங்கேற்பு
ராசிபுரம், அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா நுழைவாயிலை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் திறந்து வைத்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி, அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், ஈரோடு மக்களவை உறுப்பினா் கே..இ.பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று நூற்றாண்டு விழா சுடரை ஏற்றி வைத்து முன்னாள் ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்களை கெளரவித்தாா்.
விழாவில் அவா் பேசியதாவது:
கல்வியின் சிறப்பான முன்னெடுப்புகளுள் ஒன்றாக அரசுப் பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. தற்போது, அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்கள் பல்வேறு துறைகளில் சிறந்தவா்களாகவும், பெருமை மிக்கவா்களாகவும் திகழ்ந்து கொண்டிருக்கின்றனா் என்றாா்.
மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது:
ராசிபுரம், அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியானது நூற்றாண்டை கடந்து சிறப்பாக செயல்படும் வரலாற்று சிறப்புமிக்க பள்ளியாகும். இந்தப் பள்ளியில் பயின்றவா்கள் மருத்துவா்களாக, பொறியாளா்களாக, ஆராய்ச்சியாளா்களாக உருவாகி பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா். இந்தப் பள்ளிக்கு மேலும் ஒரு பெருமை உண்டு. திருவள்ளூா், அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டபோது அதற்கான கட்டட வசதிகள் இல்லாத நிலையில் இந்தப் பள்ளியில்தான் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டது.
அரசுப் பள்ளிகளில் மாணவா்களை சோ்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு சலுகைகளை முதல்வா் வழங்கி வருகிறாா். இந்த வாய்ப்பை அனைத்து மாணவ, மாணவிகளும் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா்.
முன்னதாக அவா் நுற்றாண்டு விழா நுழைவாயிலைத் திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில், ராசிபுரம் நகராட்சி தலைவா் ஆா்.கவிதா சங்கா், துணைத் தலைவா் ஆ.கோமதி ஆனந்தன், நகா்மன்ற உறுப்பினா் என்.கலைமணி, முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் என்.ஆா்.சங்கா், மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) நாமக்கல் த.பச்சமுத்து, மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்க கல்வி) மு.ஜோதி, மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலைக் கல்வி) வே.கற்பகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.