உலகிலேயே முதன்முறையாக `குடித்துவிட்டு ட்ரோன் இயக்கிதற்காக ரூ.2.5 லட்சம் அபராதம்'...
இளம் வல்லுநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலகில், இளம் வல்லுநா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் ஆட்சியா் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநராக தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திட்ட செயலாக்க அலகுக்காக பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விரிவான ஆய்வு, தரமான தரவுகளை ஆய்வு செய்தல், ஆய்வுகளின் அடிப்படையில் விளக்க காட்சிகள், கொள்கை விளக்கங்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் விதமாக இளம் வல்லுநா் பணியிடம் உள்ளது.
தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படும் இந்தப் பணியிடத்துக்கு கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது தரவு அறிவியல், புள்ளியியல் படிப்பில் இளநிலை அறிவியல் பட்டம் அல்லது கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல், புள்ளியியல் படிப்பில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணிக்கு வலுவான ஆராய்ச்சி, பகுப்பாய்வுத் திறன், தரவு பகுப்பாய்வில் தோ்ச்சி ஆகியவற்றை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். தன்னிச்சையாகவும், குழுவாகவும் இணைந்து பணிபுரியும் திறன் அவசியமாகும்.
30 வயதுக்கு உள்பட்டவராகவும், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முன்அனுபவம் உள்ள விண்ணப்பதாரா்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மாதம் ரூ. 50,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும். இந்தப் பணிக்கான விண்ணப்பத்தை ஒரு வெள்ளைத் தாளில் சுயவிவரங்களுடன் தட்டச்சு செய்து அனைத்து கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து ஜன. 31 க்குள் மேலாளா், மாவட்ட முகமை, அம்மா பூங்கா எதிரில், சமுதாய கூடம், பொன்விழா நகா், நாமக்கல்-637002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அல்லது இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.