தெலங்கானாவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா - சிக்காமல் தப்பிய குற்றவாளிகள்
ராமநாதபுரம் கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன் ஏர்வாடி அருகே உள்ள பிச்சை மூப்பன் வலசை கிராம பகுதியில் உள்ள தென்னந்தோப்பு அருகில் சாலையில் கிடந்த 20 கிலோ கஞ்சா பார்சல்களை ஏர்வாடி போலீஸார் கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/v12wqncu/கஞ்சா-1.jpg)
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போதை தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போதை தடுப்பு பிரிவினரை தெலங்கானா மாநில பதிவு எண் கொண்ட கார் ஒன்று கடந்து சென்றுள்ளது.
இதையடுத்து அந்த இனோவா கிரிஸ்டா காரை போதை தடுப்பு பிரிவினர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் தங்களை போலீஸார் பின் தொடர்வதை அறிந்த அந்த காரில் வந்தவர்கள் தங்கள் காரை வேகமாக செலுத்தினர். இவர்களை பிடிக்க முயல்வதற்குள் அந்த காரில் வந்தவர்கள், ராமநாதபுரம் நகரில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள ராம் நகர் என்ற பகுதியில் காரை நிறுத்தி விட்டு தப்பினர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/s7g2ia9f/p9k3l6rn.jpg)
இதன் பின் அங்கு வந்த போதை தடுப்பு பிரிவினர் அந்த காரை திறந்து சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது காரின் பின் பகுதியில் தலா 2 கிலோ எடை கொண்ட 125 கஞ்சா பார்சல்கள் சிக்கின. இதையடுத்து கார் மற்றும் கஞ்சாவை கைபற்றிய போதை தடுப்பு பிரிவினர், தப்பி ஓடிய கஞ்சா கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர். போதை பொருள் கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதையும் மீறி அடுத்தடுத்து கஞ்சா பார்சல்கள் சிக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play