இந்திய எல்லையில் 1.1 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!
பஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் 1.1 கிலோ அளவிலான போதைப் பொருள் கடத்த முயன்ற 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் போதைப் பொருள் தடுப்பு அதிரடி படையினர் இணைந்து நேற்று (பிப்.11) இரவு அம்ரித்சர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்திய எல்லைக்கு அருகில் சோதனை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, இரவு 10.10 மணியளவில் சோட்டா ஃபாடேவால் கிராமத்தின் அருகில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. அப்போது, அதன் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இந்தியர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களிடமிருந்து 1.100 கிலோ அளவிலான ஹெராயின் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிக்க: பிரதமர் மோடியின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
பின்னர் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதுடன் இந்த கடத்தலுக்கு அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருவரும் அம்ரித்சரின் சாரங் தேவ் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
முன்னதாக, கடந்த பிப்.6 அன்று அம்ரித்சர் எல்லையில் அமைந்துள்ள மஹாவா கிராமத்தில் பாகிஸ்தானிலிருந்து பறந்து வந்த டிரோன் ஒன்று எல்லைப் பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.