பெண்களுக்கு வீட்டிலிருந்து வேலை: ஆந்திர ஐடி கொள்கையில் மாற்றம்!
ஆந்திர பிரதேசத்தில் குறிப்பாகப் பெண்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை பெரிதளவில் செயல்படுத்தவுள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
கரோனா பேரிடர் காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டது. உற்பத்தி பாதிக்காத வகையில் அனைத்து ஊழியர்களையும் வீட்டிலிருந்து பணிபுரிய நிறுவனங்கள் அறிவுறுத்தின.
இதன்மூலம், அலுவலக பராமரிப்புச் செலவுகள் குறைக்கப்பட்டதுடன் உற்பத்தியும் பெருமளவில் இருந்ததாக பல நிறுவனங்கள் தெரிவித்தன.
தற்போது மீண்டும் தங்களின் ஊழியர்களை அலுவலகங்களில் பணி செய்யுமாறு பல ஐடி நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆந்திர பிரதேச தகவல் தொழில்நுட்பக் கொள்கை 4.0-வில் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
சர்வதேச பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான அறிவியல் தினமான நேற்று, பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்து, தகவல் தொழில்நுட்பக் கொள்கை 4.0 குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதிவிட்டிருந்தார்.
“பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறோம். அவர்களின் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் வழங்கப்படுவதில் சமமான மற்றும் முழுமையான அணுகலை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
கரோனா பேரிடரின்போது பணிச் சூழலில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டது. வீட்டிலிருந்து வேலை முக்கியத்துவம் பெற்றது. சொந்த ஊரில் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும் சூழலும் ஏற்படுத்தப்பட்டது. இது அதிக உற்பத்தி அளித்ததுடன் ஊழியர்களுக்கு நெகிழ்வான பணிச்சூழலை உருவாக்கியது.
இந்த முயற்சிகள் சிறப்பான பணி - வாழ்க்கை சமநிலையை ஏற்படுத்த உதவியது. ஆந்திர பிரதேச ஐடி மற்றும் ஜிசிசி கொள்கை 4.0-வில் பெரிய மாற்றத்தை கொண்டு வரவுள்ளோம்.
நகர அளவிலும், மண்டல அளவிலும் ஐடி நிறுவனங்கள் தங்களின் அலுவலகங்களை உருவாக்க நாங்கள் சலுகை வழங்கவுள்ளோம். அடிமட்டத்தில் இருந்து வேலைவாய்ப்புகளை உருவாக்க ஐடி நிறுவனங்களை ஆதரிக்கிறோம்.
இந்த புதிய முயற்சிகள் அதிக பணியாளர்களை உருவாக்கும். குறிப்பாக பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.