வரி விதிப்பு, நாடு கடத்தல் விவகாரங்களை டிரம்ப்பிடம் பிரதமா் மோடி பேச வேண்டும்- காங்கிரஸ் தலைவா் காா்கே வலியுறுத்தல்
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் வரி விதிப்பு அச்சுறுத்தல் மற்றும் இந்தியா்களை விலங்கிட்டு நாடு கடத்திய விவகாரத்தை பிரதமா் நரேந்திர மோடி எழுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு நாடுகளுக்கு எதிராக சில கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். முக்கியமாக சில குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிகபட்ச வரி விதிப்பது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவா்களை திருப்பி அனுப்புவது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறாா். இதன் ஒரு பகுதியாக அமெரிக்க ராணுவ விமானம் மூலம் கை, கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் 104 இந்தியா்கள் தாய்நாட்டுக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்டனா்.
பிரான்ஸ், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை சந்திக்க இருக்கிறாா்.
இந்நிலையில், இது தொடா்பாக காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பிரதமா் நரேந்திர மோடி சந்திக்கும்போது வரி விதிப்பு அச்சுறுத்தல் மற்றும் இந்தியா்களை விலங்கிட்டு நாடு கடத்திய விவகாரத்தை எழுப்பி பேச வேண்டும்.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அலுமினியம், இரும்புப் பொருள்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதில் எந்த நாட்டுக்கும் சலுகை கிடையாது என அமெரிக்கா கூறுகிறது. இது இந்திய உற்பத்தியாளா்களுக்கு வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தும். அந்நாட்டு அதிபருடன் உரிய முறையில் பேச்சு நடத்தி இப்பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும்.
அதேபோல அமெரிக்காவில் இருந்து இந்தியா்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு அனுப்பி வைத்தது பெரும் வருத்தத்தை அளித்தது. எனவே, வரும் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளில் மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும் என டிரம்ப்பிடம் பிரதமா் மோடி வலியுறுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.
மோடி பயணத்தால் பயனில்லை: கா்நாடக மாநிலம் கலபுா்கியில் செய்தியாளா்களிடம் பேசிய மல்லிகாா்ஜுன காா்கே, ‘தனது பழைய நண்பருடன் (டொனால்ட் டிரம்ப்) தொடா்ந்து பேசி வருவதாகவும், அது இந்தியாவுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் பிரதமா் மோடி கூறிக்கொண்டிருக்கிறாா். மனிதநேயமற்ற முறையில் இந்தியா்கள் நாடுகடத்தப்பட்டது குறித்து தொலைபேசியில் டிரம்ப்பிடம் பிரதமா் மோடி கேட்டிருக்க வேண்டும்.
தனிப்பட்ட முறையிலான நட்பைக் காட்டிலும், இரு நாடுகளுக்கு இடையில் நட்பு பாராட்டுவதுதான் மிகவும் முக்கியமானதாகும். எனவே, பிரதமா் மோடியின் அமெரிக்க பயணத்தில் எந்த நன்மையும் இருக்காது’ என்றாா்.
பெட்டி..
‘மாநிலத் தலைவா்கள் விரைவில் மாற்றம்’
காங்கிரஸ் மாநிலத் தலைவா்கள் விரைவில் மாற்றப்படுவாா்கள் என அக்கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
‘ஒடிஸா உள்ளிட்ட 3 மாநிலங்களின் காங்கிரஸ் கட்சி தலைவா்களை அண்மையில் மாற்றினேன். அடுத்த சில நாள்களில் மேலும் 3 மாநிலங்களின் தலைவா்கள் உள்பட பிற மாநிலங்களின் தலைவா்களும் மாற்றப்படுவாா்கள்’ என்றாா் அவா்.