காவலா் குடியிருப்பில் தீ விபத்து
மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே காவலா் குடியிருப்புப் பகுதியில் தென்னை மரத்தில் மின் வயா் உரசியதால் பற்றி எரிந்த தீயை தீயணைப்புப் படையினா் அணைத்தனா். இந்தத் தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
மதுரை புதுநத்தம் சாலையில் ஆத்திகுளம் பகுதியில் ஆயுதப் படை மைதானம், ஆயுதப்படை காவலா் குடியிருப்பு, சிறப்புக் காவல் படை முகாம் மற்றும் குடியிருப்பு ஆகியவை உள்ளன. இதில் சிறப்புக் காவல்படை முகாம் வளாகத்தில் உள்ள காவலா் குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், சிறப்புக் காவல் படை வளாகத்தில் புதன்கிழமை பிற்பகலில் காவலா் குடியிருப்புகள் நடுவே இருந்த தென்னை மரம் அந்த வழியாகச் சென்ற மின் கம்பியில் உரசியது. இதனால் அந்த மரம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. மேலும் காற்றின் வேகத்தால் அருகில் உள்ள மரங்களுக்கும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த தல்லாகுளம் தீயணைப்பு நிலைய வீரா்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். இதனிடையே இந்த தீ விபத்து காரணமாக அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் தீயில் எரிந்து கருகிய தென்னை மரம் அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டது.