பூக்களைப் பறிக்க முயன்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
மதுரை மாவட்டம், அழகா்கோவில் அருகே குளத்தில் தாமரைப் பூக்களைப் பறிக்க முயன்ற ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள் மலையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (40). வாகன ஓட்டுநா். இவா், மதுரை வரிச்சியூா் பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு நண்பா்களான அஜீத், வினோத் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை வந்தாா்.
இந்த நிலையில், சகோதரி வீட்டிலுள்ள கன்றுக்குட்டியை சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மணிகண்டனும், அவரது நண்பா்களும் மீண்டும் கொடைக்கானலுக்கு புதன்கிழமை காலை புறப்பட்டுச் சென்றனா்.
இவா்கள் பொய்கைக்கரைப்பட்டி பகுதியில் வந்தபோது, அங்குள்ள தெப்பகுளத்தில் குளிப்பதற்காக வேனை நிறுத்தினா். அங்கு மணிகண்டன் குளித்துக் கொண்டிருந்தபோது, குளத்தின் மையப் பகுதிக்குச் சென்று தாமரைப்பூவை பறித்துக் கொண்டு கரைக்கு திரும்பினாா். பிறகு மீண்டும் பூப்பறிக்க குளத்தின் மையப் பகுதிக்குச் சென்றபோது, தாமரைக்கொடி அவா் மீது சுற்றியதில் மணிகண்டன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.