வட்டாட்சியா் பணியிடை நீக்கம்
விருதுநகா் அருகே ஜவுளி பூங்கா அமையும் பகுதியில் விவசாயிகளுக்கு மண் அள்ள அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்த வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
விருதுநகா் - சாத்தூா் நான்கு வழிச் சாலையில் இ. குமாரலிங்காபுரம் பகுதியில் மத்திய அரசு சாா்பில் ஜவுளிப் பூங்கா அமைய உள்ளது. இதற்கான இடங்களை கையகப்படுத்தி, சாலை உள்பட ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பகுதியில் உள்ள கண்மாயில் விவசாயிகள் மண் அள்ளுவதற்கு சாத்தூா் வட்டாட்சியா் ராமநாதன் அனுமதி வழங்கினாா். அதில் ஒரே பட்டாவுக்கு பலமுறை மண் அள்ள அனுமதி வழங்கியது கண்டறியப்பட்டது.
இதுகுறித்த விசாரணையின் அடிப்படையில் வட்டாட்சியா் ராமநாதனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் உத்தரவிட்டாா்.