நாகா்கோவிலில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா: வனத்துறையினா் மீட்டனா்
தொகுதி மறுசீரமைப்பு: சென்னையில் மார்ச் 22-ல் மாநிலக் கட்சிகள் கூட்டம்!
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் பல்வேறு மாநிலக் கட்சிகள் கலந்துக் கொள்ளும் கூட்டம் மார்ச் 22-ஆம் தேதி நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
”தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி, தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் இருக்கிறது. இதைக் குறைக்கும் அபாயம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. பொதுவாக, மக்கள் தொகையை வைத்துதான் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. மக்கள் தொகை குறைவாக இருப்பதால், நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கையும் குறையும். தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவை இடங்களை இழக்கும் என்று தெரிகிறது. அதாவது, இனி தமிழ்நாட்டுக்கு 39 இல்லை, 31 எம்.பி.க்கள் தான்! நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்! தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். இது வெறும் உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பற்றிய கவலை மட்டுமல்ல. நம்முடைய மாநிலத்தின் உரிமை சார்ந்தது.
இதை வைத்து அனைத்துக் கட்சி கூட்டத்தை நாம் கூட்டினோம். பா.ஜ.க., ஓரிரு உதிரிக்கட்சிகள் நீங்கலாக மற்ற கட்சிகள் அனைத்தும் வருகை தந்து நம்முடைய கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.
இது தமிழ்நாட்டின் பிரச்னை மட்டுமல்ல, தென் மாநிலங்களின் பிரச்னை என்பதால், இன்னும் சில மாநிலங்களும் பாதிக்கப்படும் என்று அனைவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். தென் மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாத பா.ஜ.க., வடமாநிலங்களில் பெறும் வெற்றியை வைத்தே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறது. அதுதான் சதி! தங்களுக்கு செல்வாக்கான மாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு, தங்களை வளர்த்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். இதைத் தி.மு.க. தடுத்து நிறுத்தும். தென் மாநிலக் கட்சிகள் அனைத்தையும் சேர்த்துக் கொண்டு தடுப்போம்.
தொகுதி மறுசீரமைப்பில் பாதிக்கப்படவுள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்த்து, கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க இருக்கிறோம். ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம், ஒடிசா, மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் இருக்கும் 29 கட்சிகளுக்கு நான் கடிதம் அனுப்பி இருக்கிறேன். பிற மாநில முதலமைச்சர்களுடன் நானே நேரடியாக இன்று காலை முதல் தொலைபேசியில் பேசி வருகிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று இந்தக் கருத்தை எடுத்துச் சொல்கிறார்கள். இதன் தொடர்ச்சியாகச் சென்னையில் பல்வேறு மாநிலக் கட்சிகள் கலந்துக் கொள்ளும் கூட்டத்தை மார்ச் 22-ஆம் நாள் நடத்த இருக்கிறோம்.
இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும் – ஜனநாயகக் கொள்கைகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக தொகுதி மறுசீரமைப்பு இருக்கிறது. 39 எம்.பி.க்கள் எழுப்பும் குரலையே மத்திய அரசு ஏற்க மறுக்கும் நிலையில், இந்த எண்ணிக்கை இன்னும் குறைந்தாலோ - குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அழிக்க முடியாத அநீதி ஆகிவிடும்.
இதையும் படிக்க: நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக சரிவு!
பல்வேறு மாநிலக் கட்சிகளும் இணைந்து எடுக்கும் முடிவின்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை நாம் எடுப்போம். நிதி தரமாட்டோம் - அதிகாரத்தைப் பறிப்போம் - இதைக் கேள்வி கேட்டால், தொகுதி எண்ணிக்கையைக் குறைப்போம் என்ற அளவுக்கு எதேச்சாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறது, பா.ஜ.க.
உறுதியோடு சொல்கிறேன்! பா.ஜ.க.வின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம். பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்.” என்று பேசினார்.
பா.ஜ.க.வின் ஆதிக்கவாத சாதிய சிந்தனை - நம்முடைய மக்களின் சமூகநீதியை மறுக்கிறது. பா.ஜ.க.வின் சர்வாதிகாரச் சிந்தனை - நம்மைப் போன்ற மாநிலங்களின் சுயாட்சித் தன்மையை நொறுக்குகிறது. பா.ஜ.க.வின் மதவாதச் சிந்தனை - இந்த நாட்டின் மதச்சார்பற்ற தன்மையைச் சிதைக்கிறது. பா.ஜ.க.வின் எதேச்சாதிகார எண்ணம் - கூட்டாட்சித் தத்துவத்தையே ஒழிக்கப் பார்க்கிறது. இதை இப்போது தடுக்கவில்லை என்றால், பிறகு எப்போதுமே தடுக்க முடியாது.