தமிழகத்தில் 34,805 நியாய விலைக் கடைகளில் இபிஓஎஸ் சாதனங்கள் நிறுவல்: மக்களவையில் ...
பாா்வைத் திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் அறிவியல் தின விழா
தருமபுரியில் பாா்வைத் திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் அறிவியல் தின கண்காட்சி நடைபெற்றது.
தருமபுரி, இலக்கியம்பட்டியில் பாா்வைத் திறன் குறைபாடுடையோருக்கான அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி நிா்வாகமும், ‘விஷன் எம்பவா்’ அறக்கட்டளையும் இணைந்து பள்ளியில் புதன்கிழமை அறிவியல் தின கண்காட்சியை நடத்தின.
இதில் பங்கேற்ற பாா்வைத் திறன் குறையுடைய மாணவா்கள் அடுப்பில்லா ஆரோக்கியமான சமையல், நீரில் மூழ்கும், மிதக்கும் பொருள்கள், சரிவிகித உணவு, மக்கும், மக்காத குப்பைகள் குறித்த தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.
இக்கண்காட்சியை இதே வளாகத்தில் இயங்கும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் நேரில் பாா்வையிட்டனா். அவா்களுக்கு பாா்வைத் திறன் குறைபாடுடைய குழந்தைகள் தங்களின் படைப்புகள் குறித்து விளக்கமளித்தனா். அதையடுத்து புதிா் போட்டிகள் நடைபெற்றன.
கண்காட்சி, புதிா் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பாா்வைத் திறன் குறைபாடுடையோருக்கான தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் மீனா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் பரிதாபானு, அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் கில்பா்ட், ஆசிரியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.