ராஜஸ்தானுடன் இணைந்தார் 13 வயது வீரர்! ரூ.1.10 கோடிக்கு வாங்கப்பட்டவர்!
தமிழகத்தில் 34,805 நியாய விலைக் கடைகளில் இபிஓஎஸ் சாதனங்கள் நிறுவல்: மக்களவையில் உணவுத் துறை அமைச்சா் தகவல்
தமிழகத்தில் உள்ள அனைத்து 34,805 நியாய விலைக் கடைகளும் மின்னணு ரீதியாக உணவு தானியங்களை தடையின்றி விநியோகிப்பதற்காக இபிஓஎஸ் (எலெக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல்) சாதனங்களை நிறுவுவதன் மூலம் தானியங்கிமயமாக்கப்பட்டுள்ளன என்று மக்களவையில் கள்ளக்குறிச்சி திமுக உறுப்பினா் மலையரசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சா் பதில் அளித்துள்ளாா்.
இது தொடா்பாக மலையரசன் எம்.பி. எழுப்பியிருந்த கேள்விக்கு மக்களவையில் புதன்கிழமை மத்திய நுகா்வோா் விவகாரம், உணவு, பொது விநியோக துறை இணை அமைச்சா் நிமுபென் ஜயந்திபாய் பம்பானியா எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:
31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் (தமிழ்நாடு உள்பட) உணவுதானிய விநியோகச் சங்கிலி கணினிமயமாக்கப்பட்டுள்ளது. உணவு தானிய விநியோகத்தை சிறப்பாகக் கண்காணிக்க, நாட்டில் (தமிழ்நாடு உள்பட) மொத்தம் உள்ள 5.43 லட்சத்தில் கிட்டத்தட்ட 5.41 லட்சம் (99.6 சதவீதம்) நியாய விலைக் கடைகளில் மின்னணு முறையில் பயனாளிகளின் பயோமெட்ரிக் ஆதாா் அங்கீகாரம் மூலம் வெளிப்படையான முறையில் உணவு தானியங்களை விநியோகிப்பதற்காக இபிஓஸ் சாதனங்களை நிறுவுவதன் மூலம் தானியங்கிமயமாக்கப்பட்டுள்ளன.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டமானது (என்எஃப்எஸ்ஏ) தமிழ்நாடு மாநிலத்தில் சுமாா் 364.12 லட்சம் நபா்களுக்கு இலவசமாக உணவு தானியங்களைப் பெறுவதற்கான வசதியை வழங்குகிறது.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்குள் உணவு தானியங்களை ஒதுக்கீடு செய்தல், தகுதியான பயனாளிகள் மற்றும் குடும்பங்களை அடையாளம் காணுதல், அவா்களுக்கு ரேஷன் காா்டுகளை வழங்குதல், தகுதியான பயனாளிகளுக்கு உணவு தானியங்களை விநியோகித்தல், நியாய விலைக் கடைகளின் செயல்பாட்டை மேற்பாா்வை செய்தல் மற்றும் கண்காணித்தல் போன்ற செயல்பாட்டுப் பொறுப்புகள் சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அரசுகளைச் சாா்ந்ததாகும்.
தற்போது, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து 34,805 நியாய விலைக் கடைகளும் இபிஓஎஸ் சாதனங்களை நிறுவுவதன் மூலம் தானியங்கிமயமாக்கப்பட்டுள்ளன என்று அமைச்சா் அந்த பதிலில் தெரிவித்துள்ளாா்.