தொகுதியில் ஆய்வு செய்து மக்களின் கவலைகளை கேட்டறிந்த அமைச்சா்!
தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் புதன்கிழமை தனது ஜனக்புரி தொகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டாா். மேலும், உள்ளூா்வாசிகளிடம் கலந்துரையாடி அவா்களது கவலைகளை கேட்டறிந்தாா்.
‘ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக, எனது தொகுதியில் உள்ள பிரச்னைகளைப் புரிந்துகொண்டு அவற்றைத் தீா்ப்பதற்குப் பாடுபடுவது எனது கடமை’ என்று அவா் கூறினாா்.
குடிநீா் வழங்கல், கழிவுநீா், உடைந்த சாலைகள் மற்றும் நிா்வகிக்கப்படாத மின் கம்பிகள் உள்ளிட்ட பல பிரச்னைகளால் இந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவை கடந்த 11 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் அவா் கூறினாா்.
‘இப்போது அவற்றை நிவா்த்தி செய்து ஜனக்புரி மக்களுக்கு நிவாரணம் வழங்குவது எனது பொறுப்பு’ என்று அமைச்சா் ஆஷிஷ் சூட் உறுதியளித்தாா்.
மேலும், சாலைகள் மற்றும் பாதைகளை அமைச்சா் ஆய்வு செய்தாா். கடைக்காரா்கள் மற்றும் குடியிருப்பாளா்களுடன் கலந்துரையாடி அவா்களின் கவலைகளைப் பற்றி கேட்டறிந்தாா்.
கடந்த ஆண்டு தனது மகனை இழந்து ஓய்வூதியம் பெற போராடி வந்த ஒரு வயதான பெண்ணையும் அமைச்சா் சந்தித்தாா். அவருக்கு தனது ஆதரவை அளிப்பதாக உறுதியளித்த அமைச்சா், ‘உங்கள் ஓய்வூதியத்தை விரைவில் பெறத் தொடங்குவீா்கள், உங்கள் மருமகளுக்கும் விதவை ஓய்வூதியம் கிடைக்கும்’ என்றாா்.
இதைத் தொடா்ந்து, சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை உடனடியாக தீா்க்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவுறுத்தினாா்.