குஜராத்: மாணவர்கள் உட்பட 7 பேர்: 18 மாதங்களாக தொடர் பாலியல் வதை - கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை!
குஜராத் மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 18 மாதங்களாக 7 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி, ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் ஒருவருடன் பழகிவந்திருக்கிறார். இந்த நிலையில், அவர்கள் இருவரும் சந்தித்திருக்கின்றனர். அப்போது மாணவி உடைமாற்றும்போது அந்த நபர் மாணவியை படம் பிடித்திருக்கிறார்.

அந்த வீடியோவை சக நண்பர்களிடமும் பகிர்ந்திருக்கிறார். அப்படியே அந்த வீடியோ அவர்களின் நண்பர்களுக்குள் சுற்றியிருக்கிறது. 2023 நவம்பர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரி வரை 7 பேர் மாணவியை அணுகி, அந்த வீடியோவை காண்பித்து, `இதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துவிடுவேன்' என மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அந்த வீடியோ, மாணவியின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு சென்றதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த காவல்துறை அதிகாரி, ``குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் கல்லூரி மாணவர்களும் அடக்கம். பாதிக்கப்பட்ட மாணவியும் குற்றம்சாட்டப்பட்டவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்குள் பஞ்சாயத்து நடந்திருக்கிறது. அதில் ஒருதலைபட்சமாக பேசியதால்தான், இந்த வழக்கு காவல்துறைக்கு வந்திருக்கிறது.

அந்த இளம்பெண்ணின் தனிப்பட்ட வீடியோவைப் பயன்படுத்தி, அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மார்ச் 11 அன்று குற்றம்சாட்டப்பட்டவர் மீது பாலியல் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்ய நாங்கள் பல குழுக்களை அமைத்துள்ளோம்.” என்றார்.