`நாங்க வேறலெவல் பெர்பாமெர்கள்!' - தமிழ் சினிமாவின் தற்போதைய கவனித்தக்க குணசித்தர நடிகர்கள்| Depth
ஒரு திரைப்படத்தின் கதையை முழுமையாகப் பார்வையாளர்களிடம் கடத்துவதற்கு நடிகர்களின் பங்கு முக்கியமானதொரு விஷயம். எழுத்தைக் காட்சிகளாக பார்வையாளனுக்குக் கடத்துவதில் நடிப்பு ஒரு பிரதான பங்களிப்பைச் செலுத்துகிறது. கதாநாயகன்களைத் தாண்டி படத்தின் அத்தனை துணை கதாபாத்திரங்களும் அதற்கு முக்கிய பங்காற்றுவது அவசியம். ஹாலிவுட் வரலாற்றில் முன்னணி கதாநாயகன்களுக்கு நிகரான கதையம்சமும் திருப்பங்களும் படத்தின் குணசித்திர கதாபாத்திரங்களுக்கும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அதுபோன்ற குணசித்தர கதாபாத்திரங்களுக்கும் முக்கிய டிராக் கொண்ட கதைகளை முன்னெப்போதையும்விட தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக அதிகமாகப் பார்க்க முடிகிறது. கதையின் போக்கில் தனக்கான மீட்டரை கச்சிதமாகப் பிடித்து பல குணசித்தர நடிகர்களும் தங்களின் நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு வலுசேர்த்துவருகின்றனர். வாகை சந்திரசேகர், நாசர், பிரகாஷ்ராஜ், இளவரசு, சமுத்திரக்கனி என பல ஆண்டுகளாக கவனிக்கத்தக்க பங்களிப்பைச் செய்பவர்களைத் தாண்டி, சமீபத்திய படைப்புகளில் கவனம் ஈர்த்த குணசித்தர நடிகர்களைப் இக்கட்டுரையில் பார்க்கலாம்
காளி வெங்கட்:
ஒரு நடிகர் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய கேரக்டரால் நம்மை கலங்கடிக்க முடியுமா? நம்மை சிந்திக்க வைக்க முடியுமா? இவை அனைத்தையும் சாதரணமாக நிகழ்த்திக் காட்டக்கூடியவர் நம் காளி வெங்கட். கதாபாத்திரங்களின் உள்ளுணர்வுகளை பக்குவமாகப் புரிந்துகொண்டு அதன் எமோஷன்களை திரையில் கொண்டு வருவதில் காளி வெங்கட் கில்லாடி என்றே சொல்லலாம். முக்கியமாக, ஒவ்வொரு படத்தில் தன்னுடைய குரலின் தொனியில் சிறு சிறு மாற்றங்களைக் கொடுத்து கதாபாத்திரங்களுக்கு பக்காவாகப் பொருந்தி நம் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்துக்கொள்வார்.

வெறுப்பினை சம்பாதிக்கும் கோட்டியாக, வெள்ளையர்கள் காலத்துக் குமஸ்தாவாக, கிரிக்கெட் ப்ரியராகவும் வாழ்க்கைக்கு அட்வைஸ் கொடுக்கும் கருப்பையாவாக என அவர் கடந்தாண்டு நடித்திருந்த அத்தனை கதாபாத்திரங்களிலும் குணச்சித்தர நடிகராக முழுமை காட்டியிருந்தார். இந்த லிஸ்டைத் தாண்டி கடந்தாண்டு `பேபி ஜான்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார் காளி வெங்கட். அப்படத்தில் சிறியதொரு கதாபாத்திரத்தில் வந்தாலும் இதயம் கணக்கச் செய்யும் நடிப்பைக் கொடுத்திருந்தார். இப்படியான விஷயங்களால்தான் தற்போது `மோஸ்ட் வான்டட்' குணசித்தர நடிகராக கோலிவுட்டில் பம்பரமாய் சுற்றி வருகிறார் காளி வெங்கட்.
`பிடிச்சிருக்கு அதான் ரீசன்! அதுக்குமேல ரீசன் எதுக்கு!'
ரமேஷ் திலக்:
ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்துக் கொண்டிருந்த சமயத்தில் நடிப்பிற்கான ஒரு வாய்ப்பு ரமேஷ் திலக்கிற்கு கிடைக்கிறது. கனவுகளுடன் சுற்றித் திரியும் அவருக்கு இந்த வாய்ப்பு எவ்வளவு முக்கியம் என்பதை மனதில் கொண்டு அன்று ஓடத் தொடங்கியவர் இன்று ரேஸில் முன்னிலை வகிக்கிறார். காமெடி இவருடைய பலம்.
`குட் நைட்' படத்தில் ரமேஷாக நம் இல்லங்களில் இருக்கும் ஒருவரைப் போல அவ்வளவு யதார்த்தங்களைக் காட்டியிருந்தார். அதிலும், தனது மனைவிக்கு ஆறுதல் கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து வெளியேறிய பிறகு அழும் காட்சிகளில் ஐகானிக் ப்ரோ! மெரினாவில் கொரியர் டெலிவரி செய்பவராக, சூது கவ்வும் படத்தில் டார்க் காமெடி காட்டும் சேகராக நம் மனதில் இவரின் பல கதாபாத்திரங்கள் பதிவதற்கு நாம் இலகுவாக பொருத்திப் பார்க்ககூடிய விஷயங்கள் இவரிடம் நிறைந்திருப்பதே முக்கியக் காரணம்
`தி பாய் நெக்ஸ்ட் டோர் ரமேஷ் திலக்!'
நட்ராஜன்:
சினிமாவில் வேறு ஒரு துறையில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் ஏதோ ஒரு சந்தர்பத்தில் நடிப்பின் பக்கம் வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் நிரூபித்தவர்கள் இன்றும் தொடர்ந்து லைம் லைட்டில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த லிஸ்டில் முக்கியமானவர் நட்டி (எ) நட்ராஜன். ஒளிப்பதிவாளராக பல முக்கியப் படங்களில் பணிபுரிந்துக் கொண்டிருந்தவர் தன்னுடைய நண்பர்களின் படங்களில் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவைத் தாண்டி நடிகராக சரியான மீட்டரை இவர் பிடித்துக் கொண்டதால் இன்று பிஸியான குணசித்தர நடிகராக ஓடிக் கொண்டிருக்கிறார்.

அ.வினோத்தின் `சதுரங்க வேட்டை' படத்தில் தில்லாலங்கடி வேலைகளை பார்ப்பவராக, மனம் திருந்தி நியாயத்தின் வழிக்கு செல்பவராக இரண்டு பக்கத்தையும் கச்சிதமாக பேலன்ஸ் செய்து நடிகராகத் தன்னை நிரூபித்துக் காட்டினார். இதோ இந்த ஒரு முன்னனி கதாபாத்திரத்தோடு நட்டியின் ஆட்டம் நின்றுவிடவில்லை. அய்யனாராக, கண்ணபிரானாக வில்லனிசத்தை காட்டியவர் அடுத்தடுத்து `மகாராஜா', `கடைசி உலகப் போர்' என பல குணசித்தர கதாபாத்திரங்களில் அல்டிமேட் காட்டினார், காட்டிக் கொண்டிருக்கிறார்!
`நட்டி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட் சார்!'
லால்:
இந்த லிஸ்டில் முக்கியமான சீனியர் நடிகர் என்றே இவரைச் சொல்லலாம். ஒரு கதாபாத்திரத்தின் மூலம் நம்மை மக்களிடம் பதிவு செய்ததற்குப் பிறகு அந்தக் கதாபாத்திரத்தின் இமேஜை மாற்றுவது இலகுவான காரியமல்ல. மாற்றத்தைக் காட்டுவதற்கான கதாபாத்திர வாய்ப்புகள், அதில் அவரின் நடிப்பு மக்களுக்குப் பொருந்துவது என பல விஷயங்கள் அடுகடுக்காக பின்னால் இருக்கும். ஆனால், இவையெல்லாம் லாலுக்கு கைகூடியது என்றே சொல்லலாம். `சண்டகோழி' படத்தின் காசி கதாபாத்திரம் ஓ.ஜி! அச்சத்தைக் கொடுக்குமளவுக்கான வலுவான வில்லன் கதாபாத்திரம் அது.
ஆனால், இதே போன்றதொரு இமேஜில் லால் தேங்கிவிடவில்லை. வில்லன் கதாபாத்திரங்களில் அதிரடிகாட்டினாலும் மற்றொரு பக்கம் இதயத்தை கணமாக்கும், ஏக்கத்தைத் தூண்டும் குணசித்திர கதாபாத்திரங்களில் தற்போது தொடர்ந்து மிளிர்ந்து வருகிறார். `கர்ணன்' படத்தின் ஏமன் கதாபாத்திரத்தில் பெருங்காதலின் அழகைச் சொல்பவராக, கர்ணனுக்கு வழிகாட்டியாக இருந்திருப்பார். அப்படத்திற்குப் பிறகு மல்லுவுட்டைத் தாண்டி கோலிவுட்டிலும் பெர்மனென்ட் சீட்டைப் பெற்றார். கடந்தாண்டு வெளியான `ஸ்டார்' படத்தில் தந்தையாக நடித்து நம்மை கலங்கச் செய்து ஒரு ஏக்கத்தையும் கொடுத்திருந்தார். தற்போது இதே போன்ற குணசித்திரக் கதாபாத்திரங்களில் அடுத்தடுத்து பரபரப்பாக நடித்து வருகிறார் லால்!
`பந்தயம் அடிச்சது காசி ஆளு இல்ல. பந்தயம் அடிச்சதே காசிதான்!'
கருணாஸ்:
காமெடி நடிகர்களாக முத்திரை பதித்தவர்கள் குணசித்தர நடிகர்களாகவும் மக்கள் மத்தியில் தங்களை நிரூபிப்பது கொஞ்சம் சவாலான விஷயம்! இதனை சாத்தியப்படுத்திக் காட்டிய சிலரில் முக்கியமானவர் கருணாஸ். காமெடினாக நகைச்சுவைக் காட்டியவர் அடுத்தடுத்து பல குணசித்தர கதாபாத்திரங்களிலும் தன்னை ஆழமாக பதிவு செய்திருக்கிறார். கடந்த ஆண்டு இவர் நடித்திருந்த `போகுமிடம் வெகுதூரமில்லை' திரைப்படம் இவருடைய கரியரில் புதுமை என்றே சொல்லலாம்.

அப்படத்தில் தென் மாவட்ட வட்டார வழக்கு மொழியைப் பேசும் அப்பாவியாக நம்மைச் சிந்திக்கவும் , இதயத்தை கனக்கவும் செய்தார். `சூரரைப் போற்று' திரைப்படத்திலும் இதே போன்றதொரு இவரின் அப்பாவிதனமான முகப்பாவனை அந்தக் கதாபாத்திரத்தின் மீது கவனம் ஈர்க்கச் செய்தது. ஆனால், ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் இவர் தொடர்ந்து பயணிக்காதது இவருடைய தனித்தன்மை என்றே சொல்லலாம். கடந்தாண்டில் `போகுமிடம் வெகுதூரமில்லை' படத்தில் அப்பாவியாக நடித்த அவர் தன்னுடைய அடுத்தப் படமான `கங்குவா' படத்தில் வேறு கோணத்தில் அதிரடி காட்டியிருந்தார். கடந்த ஆண்டு சொர்க்கவாசல் படத்தில் முற்றிலும் வேறொரு போலீஸ் கதாபாத்திரம். அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
`இந்தக் குதிரைக்கு எந்த கடிவாளத்தையும் போட்டு மறைக்க முடியாது! பாதை மாறினாலும் வண்டிக்கு ப்ரேக்டவுன் கிடையாது!'
ப்ரித்வி பாண்டியராஜ்:
நடிகர்கள் சிலருக்கு தங்களுடைய கரியரில் ப்ரேக் மொமன்ட் உடனடியாக க்ளிக் ஆகும். சிலருக்கு ஒரு குறிப்பிட்ட நேரமெடுக்கும். ஆனால், அந்த பிரேக் மொமன்ட் ஒவ்வொரு நடிகனுக்கும் மிகவும் முக்கியமானதொரு தருணம். நடிகர் பாண்டியராஜின் இளைய மகனான ப்ரித்விராஜனுக்கு கடந்தாண்டு ப்ரேக் கொடுத்த திரைப்படம் `ப்ளூ ஸ்டார்'. சாம் கதாபாத்திரத்தில் சகோதரனுடன் முட்டி மோதுவதாக, காதலிக்கு மொக்கக் கவிதை சொல்லும் ப்ளே - பாயாக நம்மை என்டர்டெயின் செய்திருப்பார்.

சாம் கதாபாத்திரத்தின் மூலம் தன்னுடைய அடுத்தடுத்த கதாபாத்திரங்களை கவனிக்கும் அளவுக்கு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார். `ப்ளூ ஸ்டார்' திரைப்படம் வெளியான சமயத்தில் பாராட்டுகள், கொண்டாட்டங்கள் என பரபரப்பாக இருந்தார் ப்ரித்வி! அத்திரைப்படத்திற்குப் பிறகு கொஞ்சம் பொறுமை காத்தவர் தற்போது சிவகார்த்திகேயனின் `பராசக்தி' படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்!
`கவிதை மட்டும் இவருடைய மேஜிக் இல்ல. இவரே ஒரு மேஜிக்தான்!'
பால சரவணன்:
காமெடியனாக களமிறங்கும் அனைத்து திரைப்படங்களிலும் ஒரு பெர்பாமெராக தனித்து நிற்பவர் பால சரவணன். `பண்ணையாரும் பத்மினியும்' திரைப்படம் வெளியாகி 11 ஆண்டுகளாகிறது. ஆனால், இன்று வரை பால சரவணன் எனச் சொன்னதும் டக்கென பலருக்கு நினைவுக்கு வருவது அப்படத்தின் பீடை கதாபாத்திரம்தான். தன்னால் இயன்றளவுக்கு காமெடி மட்டுமல்லாமல் பெர்பாமெராகவும் ஒரு கதாபாத்திரத்தில் ஆழத்தைக் காட்டுவது இவரின் ப்ளஸ் என்றே சொல்லலாம்!

கடந்தாண்டு மட்டும் `அயலான்', `பேச்சி' , `லப்பர் பந்து' , `மிஸ் யூ' என அவர் நடித்த அத்தனை திரைப்படங்களிலும் அவர் கதாபாத்திரம் பதியுமளவுக்கு பெர்பாமென்ஸைக் கொடுத்திருந்தார். இதில் `லப்பர் பந்து' திரைப்படத்தின் காத்தாடி கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. முதல் பாதியில் தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலமாக கிச்சு கிச்சு மூட்டியவர் இரண்டாம் பாதியில் நம்மை சிந்திக்கச் செய்தார். இந்த இரண்டு பக்கத்தையும் கச்சிதமாக கையாண்டதற்காகவே மக்கள் மத்தியில் அப்ளாஸை அள்ளினார்! இதோ இந்த நடிகர் இந்தாண்டு தொடக்கத்திலேயே தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டார்!
`அதென்ன ஹீரோ ப்ரண்ட் மாதிரி, ஹீரோ ப்ரண்டாகவே நான் மாறிடுறேன்!'
`லொள்ளு சபா' மாறன்:
தற்போதைய கோலிவுட்டின் `மோஸ்ட் வான்டட்' காமெடி நடிகர்களில் முக்கியமானவர் மாறன். `இன்னும் என்ன நீ பைத்தியகாரனாகவே நினைச்சிட்டு இருக்கல்ல' என்ற இவருடைய காமெடி வசனம் அனைவரும் இவரை அடையாளப்படுத்து ஐடென்ட்டி! சாந்தானத்துடன் இவர் இணையும் திரைப்படங்களெல்லாம் காமெடிக்கு மினிமம் கேரண்டி என்றே சொல்லலாம். இந்த டாப் காமெடியன் இமேஜ் ஒரு புறமிருந்தாலும் கடந்தாண்டு மற்றொரு புறம் குணசித்திர நடிகராகவும் கடந்தாண்டு மிளிர்ந்தார்.

ஈகோவில் தனது சகோதரனிடம் சண்டைப் போடும் காட்சிகள், தனது தவறை உணர்ந்து ஒரு சட்டையின் மூலம் சமாதானத்தை வெளிப்படுத்தும் காட்சிகளெல்லாம் நடிகர்' லொள்ளு சபா மாறனுக்கான சான்றுகள். இதுமட்டுமல்ல, `ஸ்டார்' படத்திலும் காமெடி அல்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து கேரக்டர்களில் வேறுபாட்டைக் காட்டியிருந்தார். மாறனின் இந்த அவதாரம் இன்னும் தொடர வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!
`இன்னும் என்னை நீங்க காமெடியனாகவே நினைச்சிட்டு இருக்கீங்கள்ல!'
இந்த லிஸ்ட்டில் கடந்த சில ஆண்டுகளாக வந்த பெர்பாமன்ஸ்களில் இவர்கள் பெயரையும் சேர்க்கலாம் என நீங்கள் நினைக்கும் நடிகரின் பெயரைக் கமென்ட்டில் தெரிவிக்கவும்.