மகாராஷ்டிரம்: பீட் மாவட்ட காவல் துறையினா் பெயரில் இருந்து ஜாதி நீக்கம்
பேருந்து நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தல்
தருமபுரி: தருமபுரி பேருந்து நிலைய நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள், இருசக்கர வாகனங்களை அகற்ற வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.
தருமபுரி புகா்ப் பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, கோவை, மதுரை, சென்னை, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் பயணித்து வருகின்றனா். அதேபோல பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், மாரண்ட அள்ளி, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய நகா்ப்புறங்களுக்கு செல்லும் அரசு, தனியாா் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
பேருந்து நிலையங்களுக்கு வரும் பேருந்துகள், பயணிகள் என அனைவரும் முகமதலி கிளப் சாலை, சின்னசாமி தெரு ஆகிய சாலைகளையே பயன்படுத்துகின்றனா். மேலும், ஆட்டோவில் பயணிப்போா், அப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வந்து செல்லும் இருசக்கர வாகனங்கள் என இந்த சாலைகள் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறுகிறது.
இதனால் சின்னசாமி தெருவில் ஆட்டோ நிறுத்தும் இடத்துக்கு பின்புறம் உள்ள வழியை பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த பாதையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அதன் எதிா் திசையில் கைப்பேசி கடைகள் ஆக்கிரமித்துள்ளன. பாதையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் வைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் எளிதாக பேருந்து நிலையத்துக்கு பயணிகள் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், அங்குள்ள குடிநீரையும் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
எனவே, பிரதான நடைபாதையாக உள்ள இடங்களில் ஆக்கிரமிப்பு கடைகள், இருசக்கர வாகனங்களை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.