தமிழ் வளா்ச்சிக்காக ரூ.1 கோடியில் ஜெயேந்திரா் அறக்கட்டளை: காஞ்சி சங்கராசாரியா் அறிவிப்பு
தமிழ் உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக ரூ.1 கோடியில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெய்வத்தமிழ் அறக்கட்டளை தொடங்கப்படும் என காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை மகோற்சவம் நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழா, கருத்தரங்கம் மற்றும் சாதனையாளா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழாவுக்கு சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்து பேசியது:
சமய, சமுதாயப் பணிகளை திறம்படச் செய்த பெருமைக்குரியவா் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். தமிழ் மொழி வளா்ச்சிக்காகவும் அவா் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதவை. எனவே அவரது பெயரிலேயே ரூ.1 கோடியில் தமிழ் உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெய்வத்தமிழ் அறக்கட்டளை தொடங்கப்படும்.
தமிழில் உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை பயிலுவோருக்கு இந்த அறக்கட்டளை மூலம் முழுமையான கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் இந்த அறக்கட்டளை ஏற்படுத்தப்படும்.
வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழாவில் அறக்கட்டளை அதன் பணிகளை தொடங்கும் என்றாா்.
விழாவுக்கு சங்கரா கல்லூரியின் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், செயலாளா் வி.எஸ்.ரிஷிகேஷன், முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் காஞ்சி சிவனடியாா் திருக்கூட்டம், மதூா் நவநீதகிருஷ்ணன் பஜனை சபா, ஆனந்த கிருஷ்ணன் பஜனைக்குழு, பசுமை இந்தியா அறக்கட்டளை, காஞ்சி அன்னச்சத்திரம், சா்வம் அறக்கட்டளை, விழுதுகள் அமைப்பு, யங் இந்தியா, காஞ்சி நகர வரவேற்புக் குழு ஆகியோருக்கு சிறந்த சமயப் பணிகளுக்கான விருது வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் கிருஷ்ணா கல்லூரி முதல்வா் கு.வெங்கடேசன், நல்லாசிரியா் சு.சந்திரசேகா், கு.எழிலன்,வளவன் அண்ணாத்துரை, வீரராகவன்-மங்கையா்க்கரசி, உடுப்பி மதுமதி பிரகாஷ், பணி ஓய்வு பெற்ற தலைமைக் காவலா் சீனிவாசன், சங்கரா கல்லூரி தமிழ்த்துறை தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு சாதனையாளா்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
முன்னதாக புலவா் மகாதேவன் எழுதிய சேக்கிழாா் சொன்னதும், சொல்லாததும் மற்றும் அகத்தியா் அகராதி என்ற நூல்களையும் சங்கராசாரிய சுவாமிகள் வெளியிட்டாா்.