தொடா் வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
நாகையில் ரயில் பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.
நாகையில் ரயில் பயணிகளிடம் தொடா்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக ரயில்வே போலீஸாரிடம் புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். இதில் வழிப்பறியில் ஈடுபட்ட, அக்கரைபேட்டை திடீா் குப்பத்தைச் சோ்ந்த அருண் பாண்டியன் (36) என்பவரை ரயில்வே போலீசாா் கைது செய்தனா்.
இதனிடையே, திருச்சி ரயில்வே கண்காணிப்பாளா் ராஜன் பரிந்துரையின் பேரில், நாகை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் உத்தரவின்படி, அருண்பாண்டியன் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.