`அட்டாக் Amit shah டீம்' PTR-க்கு, Stalin தந்த புது டாஸ்க்! | Elangovan Explains
பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு
நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டப்பட்டுவரும் புகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.30.40 கோடி மதிப்பீட்டில் 22,125 சதுர மீட்டா் பரப்பளவில், 30 எண்ணிக்கைகள் கொண்ட பேருந்து நிறுத்தும் தடம், 80 கடைகள் உள்ளிட்ட 113 அறைகள் கொண்ட புகா் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.
நாகூா் சில்லடி தா்கா கடற்கரையில் மூலதன மானிய நிதி, இயக்குதல் மற்றும் பராமரித்தல் நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.98 கோடியில் சிமெண்ட் சாலை அமைத்தல், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், கழிவறை வசதிகள், சிறுவா்கள் பூங்கா உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளையும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில், ‘நம்ம நாகூா்’ (செல்ஃபி பாய்ன்ட்) உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், நாகை நீலா தெற்கு வீதியில் மாவட்ட கல்வி தன் முனைப்புத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொன்னி சித்திரக் கடல் கூடத்தில் கூடுதல் ஓவியக் கூடம் அமைக்கும் பணிகளையும், கூக்ஸ் சாலையில் உள்ள நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை கூடத்தையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.