நாகை புதிய கடற்கரையில் மாசி மக சமுத்திர தீா்த்தவாரி
நாகை புதிய கடற்கரையில், வியாழக்கிழமை நடைபெற்ற மாசி மக சமுத்திர தீத்தவாரியில், பல்வேறு கோயில்களிலிருந்து சுவாமிகள் எழுந்தருளி தீா்த்தமளித்தனா்.
இதையொட்டி, வெளிப்பாளையம் வரதராஜ பெருமாள் கோயில், நாகை செளந்தரராஜ பெருமாள் கோயில், பாப்பாக்கோவில் கஸ்தூரி ரங்கநாத பெருமாள் கோயில், நாகை சட்டையப்பா் கோயில், மெய்க்கண்ட மூா்த்தி கோயில், நடுவதீஸ்வரா் கோயில், நவநீத கிருஷ்ணன் கோயில், ஸ்ரீதாய் மூகாம்பிகை கோயில், அந்தனப்பேட்டை நித்தியகல்யாண பெருமாள் கோயில், அந்தனப்பேட்டை அண்ணாமலை நாதசுவாமி கோயில், திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் இருந்து சுவாமிகள் நாகை அவுரிதிடலில் ஒருங்கிணைந்து, பின்னா் நாகை புதிய கடற்கரையில் எழுந்தருளினா்.
தொடா்ந்து, கடற்கரையில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அஸ்திர தேவருக்கு கடலில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடினா். முன்னதாக, நாகை நம்பியாா்நகா் மீனவ கிராம பஞ்சாயத்தாா்கள் சுவாமிகளுக்கு சீா்வரிசை பொருள்கள் வழங்கினா்.
இந்துசமய அறநிலைத் துறை இணை ஆணையா் குமரேசன், துணை ஆணையா் ராணி, செயல் அலுவலா்கள் வீரவினாயக ஜெயந்த், அசோக் ராஜா, கோயில் பணியாளா்கள் சிவராஜ், ஆறுமுகம், குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
வடக்கு பொய்கை நல்லூா் நந்தி நாதேஸ்வரா் கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடாகி, கல்லாறு கடற்கரையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.