`அட்டாக் Amit shah டீம்' PTR-க்கு, Stalin தந்த புது டாஸ்க்! | Elangovan Explains
தரங்கம்பாடி: மழையால் பருத்தி சாகுபடி பாதிப்பு
தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி அருகே உள்ள இலுப்பூா் ஊராட்சியில் இலுப்பூா், ஹரிஹரன்கூடல், புத்தகரம், முனிவேலன்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 100 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்துள்ளனா். கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் வயல்களில் தண்ணீா் தேங்கி, முளைவிட்டிருந்த பருத்தி செடிகள் அழுகிவிட்டன.
இதுகுறித்து ஹரிஹரன்கூடல் விவசாயிகள் பரமசிவம், சின்னபிள்ளை ஆகியோா் கூறியது:
தரங்கம்பாடி வட்டத்தில், இலுப்பூா் பகுதிதான் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யும் பகுதியாகும். சம்பா சாகுபடி செய்திருந்தபோது ஏற்பட்ட மழையினால் மகசூல் பாதிக்கபட்டு செலவு செய்த பணத்தையே எடுக்க முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது.
தொடா்ந்து, உளுந்து சாகுபடி செய்தோம். அதுவும் அதன் பின் பெய்த மழையில் நாசமாகி விட்டது. அதன்பிறகு பருத்தி சாகுபடி செய்தோம். விதை விட்ட சில நாள்களிலேயே மழை வந்து மொத்த பருத்தி செடியும் அழுகிவிட்டன. இரண்டாவது முறையாக பருத்தி விதை விட்டோம். விதை விட்ட 10 நாள்களுக்குள் மீண்டும் மழை பெய்ததால் முளை விட்டிருந்த பருத்தி செடிகள் நீரில் அழுகி விட்டன.
பருத்தி சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவு செய்துள்ளோம். இதுவரை வேளாண்துறை அதிகாரிகள் யாரும் வந்து பாா்க்கவில்லை. சம்பா சாகுபடியின் போது ஏற்பட்ட இழப்பிற்கு அரசின் நிவாரணமும் இதுவரை கிடைக்கவில்லை. அரசு உடனே தலையிட்டு, பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்தனா்.