தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: பத்தாயிரம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்!
மாசி மகம் : திருக்கண்ணபுரம் கடலில் பெருமாள்கள் தீா்த்தவாரி
திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் மாசி மகத்தையொட்டி, திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜ பெருமாள் உள்பட பல்வேறு கோயில்களின் பெருமாள் சமுத்திர தீா்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், திருக்கண்ணபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ செளரிராஜ பெருமாள் கோயில் உள்பட பல்வேறு பெருமாள் கோயில்களின் மாசிமகத் தீா்த்தவாரி, ஆண்டுதோறும் காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் நடைபெறும்.
அதன்படி, ஸ்ரீ செளரிராஜ பெருமாள், திருமருகல் ஸ்ரீ வரதராஜ பெருமாள் தனித்தனி பல்லக்கில் திருமலைராயன்பட்டினம் வெள்ளை மண்டபத்துக்கு வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் எழுந்தருளினா். செளரிராஜ பெருமாள் தங்க கருட வாகனத்தில் அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் மாவிளக்கிட்டு பெருமாளை வழிபட்டனா்.
பின்னா், பவழக்கால் சப்பரத்தில் ஸ்ரீ செளரிராஜ பெருமாள் திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு வெள்ளை மண்டபத்திலிருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டாா். தொடா்ந்து, திருமருகல் ஸ்ரீ வரதராஜ பெருமாள், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜ பெருமாள், ஸ்ரீ ரெகுநாத பெருமாள், ஸ்ரீ வெங்கடேச பெருமாள், நிரவி ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள், காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமா் பெருமாள் ஆகிய சுவாமிகள் பட்டினச்சேரி கிராமம் வழியே கடற்கரைக்கு எழுந்தருளினா். மீனவ கிராமத்தினா் சாா்பில், கிராம எல்லையில் சுவாமிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
எல்லா பெருமாள்களும் தனித்தனி பல்லக்கில் வீற்றிருந்தவாறு கடலில் இறங்கி மூன்று முறை சுற்றி பக்தா்களுக்கு தீா்த்தவாரி அருளினா். இதில், சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
பின்னா் கடற்கரையில் ஸ்ரீ செளரிராஜ பெருமாள் இருந்த சப்பரம் இறக்கிவைக்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்தி, பல்வேறு பழங்களுடன் அா்ச்சனை செய்து வழிபட்டனா்.
தீா்த்தவாரி நிகழ்ச்சி முடிந்து இரவு எல்லா பெருமாள்களும் திருமலைராயன்பட்டினத்தில் அந்தந்த கோயில்களுக்கென ஒதுக்கப்பட்ட மண்டபத்துக்கு எழுந்தருளினா். அங்கு பெருமாள்களுக்கு சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், காவல் ஆய்வாளா் மரியகிறிஸ்டின் பால் மற்றும் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுட்டிருந்தனா்.
அனைத்து பெருமாள்களும் வெள்ளிக்கிழமை காலை அந்தந்த கோயில்களுக்கு புறப்பாடாகின்றனா்.