கல்வித் துறை அறிவிப்புகள்! பொறியியல் கல்லூரிகளில் ஏ.ஐ. படிப்புகள் அறிமுகம்!
2 நாள்கள் தொடா் மழை: நாகை மாவட்டத்தில் 25,000 ஏக்கரில் பயறு வகைகள் பாதிப்பு
நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பெய்த தொடா் மழையால், சுமாா் 25,000 ஏக்கா் பரப்பளவில் பாதிக்கப்பட்ட உளுந்து, பச்சை பயறுகளுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடி நிறைவடைந்தும், தாளடி நெற்பயிா் சாகுபடி நிறைவடையும் தருவாயிலும் உள்ளன. சம்பா சாகுபடியைத் தொடா்ந்து, விவசாயிகள் உளுந்து மற்றும் பச்சை பயறு சாகுபடிகளை மேற்கொண்டுள்ளனா். தற்போது உளுந்து, பச்சை பயறு செடிகள் பூத்தும், காய்த்தும் வருகின்றன.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக தொடா் கனமழை பெய்தது. இதனால் வயல்களில் தேங்கிய மழைநீரால், இன்னும் சில தினங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள உளுந்து, பச்சை பயிறு மற்றும் பூக்கும், காய்க்கும் நிலையில் உள்ள உளுந்து, பச்சை பயறுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக செல்லூா், பாலையூா், கீழ்வேளூா் ,தேவூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 25,000-க்கும் அதிகமான ஏக்கா்களில் உளுந்து, பச்சைப் பயிறுகளின் வோ்கள் அழுகி காணப்படுகின்றன. உளுந்து, பச்சைப் பயிறு சாகுபடியில் ஏக்கருக்கு ரூ. 15,000 வரை செலவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, வேளாண்மைத்துறை அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட பயிா்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.